முறைகெட்ட அரசுகளும் முறையான சட்டங்களும்-2
சென்ற பதிவில் நிலம் சம்பந்தமாக குறிப்பிட்ட விடயங்கள் போக இருப்பது நிலத்தை வாங்குதல் அல்லது விற்றலில் இருக்கின்றது.
இப்போது ஒரு நிலத்தை வாங்க முடிவு செய்து உள்ளீர்கள் என்றால் அதனை பற்றிய விடயங்களை ஆராய பதிவாளர் அலுவலகம் செல்ல வேண்டி உள்ளது. அப்படி சென்றாலும் வில்லங்கம் சம்பந்தமாக விசாரிக்க நாம் தனியாக லஞ்சம் தர வேண்டி இருக்கிறது. இதையே நாம் முழுவதுமாக கணினி மயமாக மாற்றினால் என்ன? ஒரு இணையத்தளம் மூலம் நீங்கள் பணம் செலுத்திய பின்னர் அந்த குறிப்பிட்ட நிலத்தினை பற்றிய விவரங்களை காண்பித்தால் அரசுக்கும் வருமானம், நிலத்தை வாங்குபவருக்கும் இருந்த இடத்தில் இருந்தே வேலை நடக்கும். நிலத்தை வாங்குபவர் தவிர வேறு யாரும் இதனை பயன்படுத்துவதையும் தடுக்கலாம். இதன் மூலம் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம் புகுவதை தடுக்கலாம். இடைத்தரகர்களையும் தவிர்க்கலாம்.
நிலத்தை பார்த்தாச்சு. அடுத்து பதிவு செய்தல் தானே. நிலத்தை வாங்கும்போது பணத்தை கொடுக்க வேண்டும். அதற்கு பதில் ஒரு வங்கியில் உள்ள ஒரு கணக்கில் இருந்தே இதனை முடிக்கலாமே. எப்படி என்றால் உங்களுடைய சேமிப்பு கணக்கு உள்ள வங்கியில் இருந்து நீங்கள் விற்பவரின் கணக்கிற்கு பணம் செலுத்த வேண்டும். அப்படி செலுத்தும்போது அதனை வங்கி தனிப்பட்ட கட்டணம் வாங்கி கொண்டு அதற்கு சான்றிதல் வழங்கி அதனை அப்படியே இணையதளம் மூலமே பத்திர பதிவு செய்யலாம். இந்த பத்திர பதிவிற்கு
வங்கியானது சாட்சியாக இருக்கும் அல்லது வங்கியின் மேலாளர் சாட்சியாக இருப்பார். இதில் பதிவாளர் செய்ய வேண்டியது என்ன வென்றால் அவரும் இணைய தளத்தின் மூலம் அந்த பத்திர பதிவில் செலுத்த வேண்டிய கட்டணங்கள் செலுத்தப்பட்டு உள்ளனவா என்று பார்த்து இணையத்தளம் மூலம் அதனை சான்றளிக்க வேண்டும். எல்லாம் சரி என்றால் வாங்கியவரின் வீட்டு முகவரிக்கு அந்த பத்திரம் அடுத்த ஏழு நாட்களுக்குள் வரும்படி செய்யலாம்.
இதில் எந்த ஒரு இடத்திலும் லஞ்சம் வர வாய்ப்பும் இல்லை.
அடுத்தவருக்கு பத்து சதம் கொடுக்க வேண்டிய அவசியமும் இல்லை.
நிலம் வாங்குவதற்கும் விற்பதற்கும் வழிமுறை செய்து விட்டோம். அடுத்து?
அரசு நிலங்களையும் புறம்போக்கு நிலங்களையும் ஆக்கிரமிப்பு செய்து உள்ளார்கள். அவர்களை என்ன செய்வது? நம் நாட்டில் இருப்பதிலே ஒரு கடினமான கேள்வி இது தான்.
இவர்களை என்ன செய்வது? சட்டபூர்வமாக நடவடிக்கை எடுத்தால் மற்ற கட்சியினர் அதனை அரசியல் ஆக்குவார்கள். காலி செய்வது கடினம். இதற்கு முதலில் இவர்கள் ஏன் இங்கே வந்து குடியேறினார்கள் என்று பார்க்க வேண்டும்.
ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் வேலை தேடி அந்த அந்த மாநில தலைநகரத்தில் இப்படி பட்ட இடங்களில் முதலில் குடியேறுகிறார்கள். இவர்களின் வாழ்வாதாரங்கள் என்ன? கடல் அல்லது அதனை சார்ந்த இடங்களில் இவர்கள் குடியேறி இருந்தாலும் இவர்கள் மீனவர்கள் கிடையாது. இவர்கள் சென்னையை சுற்றி இருக்கும் குப்பங்களில் குடியேறி இருந்தாலும் அந்த குப்பங்கள் சென்னையின் வரலாற்றில் இருக்கின்றன. அப்படியிருக்கும் போது சட்ட விரோத நில ஆக்கிரமிப்பிற்கு மீண்டும் இதே மக்கள்தொகை பெருக்கம் தான் காரணம். இங்கே வந்து குடியேறும் மக்களின் எண்ணிக்கை அதிகமாகும் போது ஏற்கனவே குடிசையில் இருக்கும் மக்களும் தங்களின் சந்ததிகளை பன்மடங்கு பெருக்கி இருப்பார்கள். இவர்களோடு புதிதாக கூலி வேலை தேடி இங்கே வருபவர்களும் அந்த அந்த பகுதியில் இருக்கும் அரசியல்வாதிகள் மூலம் தற்காலிகமாக இருக்க சில இடங்களை பெறுகின்றனர். பின்னர் வருடங்கள் கழிந்தாலும் இவர்கள் வேறு இடங்களுக்கு செல்லாத காரணத்தால் அந்த பகுதிகளில் இருக்கும் இவர்கள் அந்த இடங்கள் இவர்களுக்கே சொந்தம் என்று சொந்தம் கொண்டாடுகின்றனர்.( ஒரு வீட்டில் பதினைந்து வருடங்களுக்கு மேல் வாடகைக்கு குடியிருந்தால் அந்த வீட்டை வாங்க குடியிருந்தவருக்கு முழு உரிமை இருக்கிறது). ஆனால் இது பொறம்போக்கு அல்லது சட்டவிரோத நில ஆக்கிரமிப்பு செய்பவர்களுக்கு பொருந்தாது. அதனால் இவர்களின் எங்கே இருந்து இங்கே வந்தார்களோ அங்கேயே இவர்களுக்கு வேலை வாய்ப்பு இருக்கும்பட்சத்தில் இவர்கள் இங்கே இருந்து கிளம்பி விடுவார்கள். ( புதிதாக எந்த ஒரு நிறுவனமாக இருந்தாலும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் தவிர மற்ற மாவட்டங்களில் தொடங்க வலியுறுத்த வேண்டும். இந்த மாவட்டங்களில் இதற்கு மேல் தொழில் தொடங்க அனுமதித்தால் அது மக்கள் தொகை வெடிப்பிற்கு வழி வகுக்கும்.)
ஆக்கிரமிப்பு ஓரளவு இதன் மூலம் கட்டுக்குள் வரும். அடுத்து ஒவ்வொரு பகுதியிலும் வடிகால் வசதியும், அதற்கேற்ப சாலை வசதியும் ஏற்படுத்த வேண்டும்.
நிலம் சம்பந்தமான மற்ற விடயங்கள் அடுத்த பதிவிலும் தொடரும்.