எதிலும் லஞ்சம்

 இரு வாரங்களுக்கு முன்னர் நாங்கள் கட்டிக்கொண்டு இருக்கும் வீடு சம்பந்தமாக மதுரை சென்றேன். வீட்டின் வேலை முழுவதும் முடியும் நிலையில் இருப்பதால் தற்போது இருக்கும் கட்டிடங்கள் கட்டுவதற்கான

மின் இணைப்பினை(Commercial) மாற்றி வீடுகளுக்காக வழங்கப்படும் மின் இணைப்பாகவும்(Domestic) வீட்டின் ஒரு பகுதிக்கு முத்தறுவாய் மின்திறன் (3-phase )மின் இணைப்பு பெறவும் சென்று இருந்தேன்.முதலில் ஏற்கனவே உபயோகத்தில் இருக்கும் கட்டிடங்களுக்கான மின் இணைப்பிலிருந்து மாற்ற கோரி ஒரு விண்ணப்பம் கொடுக்க கூறினார். அதோடு மீண்டும் வீடுகளுக்கான மின் இணைப்பு கொடுக்க கூறி ஒரு விண்ணப்பம் கொடுக்க வேண்டும் என்றனர். நான் முத்தறுவாய் மின்திறன் மின் இணைப்பு புதிதாக வாங்க வேண்டும் என்று கூறியபோது அதற்கு ஒரு விண்ணப்பமும் கொடுக்க கூறினர். இந்த விண்ணப்பங்களை வெளியில் இருக்கும் தரகரிடம் இருந்தே வாங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். அவரிடமே அந்த விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுக்கும்போது அவர் கேட்ட தொகை ஐநூறு ரூபாய்.



இதை எடுத்து கொண்டு உள்ளே சென்றால் முதலில் தற்போது இருக்கும் கட்டிடங்கள் கட்டுவதற்கான மின் இணைப்பினை(Commercial) மாற்றி வீடுகளுக்காக வழங்கப்படும் மின் இணைப்பாக(Domestic) மாற்றுவதற்கு வருவார்கள் என்றார்கள். இதற்கு தமிழக மின்சார வாரியத்திற்கு ஐநூறும் (350+150) அலுவலருக்கு ஆயிரத்தி ஐநூறும் கொடுத்தோம்.
இது தவிர வீட்டிற்கு வந்து மின் இணைப்பினை மாற்றி கொடுக்கும் ஊழியருக்கு ஒரு இரு நூறு கொடுத்தோம்.





இந்த பணத்தினை இவர்களுக்கு கொடுக்கும் முன்னர் என் அப்பாவிடம் சண்டையிட்டேன். மின்சார வாரியத்தில் கட்டவேண்டிய பணத்தை கட்டியாகிற்று அப்புறம் எதற்கு இன்னும் இவர்களுக்கு அழுகிறீர்கள் என்று. அதற்கு என் அப்பா கூறியதாவது" பக்கத்து வீட்டுக்காரன் லஞ்சம் கொடுக்கவில்லை என்று புதிதாக முத்தறுவாய் மின்திறன் (3-phase )மின் இணைப்பு கேட்டு கொடுக்கவில்லை. அவன் சண்டை போட்டு போயி ஒரு மாதம் ஆக போகிறது. இன்னும் பக்கத்து வீட்டிற்கு அந்த மின் இணைப்பு வந்தபாடில்லை. நீயும் அதே மாதிரி சண்டை போட்டால் இங்கேயும் அதுவே தான் நடக்கும்" என்றார். நான் இதற்கு லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் செய்கிறேன். இவனுங்க என்ன செய்யுரானுங்கனு பார்க்கலாம் என்றேன். ஆனால் அப்பாவிற்கு அதில் உடன்பாடும் இல்லை. நீ புகார் அளித்து விட்டு சென்னை சென்று விடுவாய். இங்கே இருக்க போவது நான் தானே என்றார். லஞ்சம் கேட்பவரும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தான். லஞ்சம் கொடுக்க எத்தனிக்கும் எனது தந்தையும் அதே புகுதியில் தான் இருபது வருடங்களாக உள்ளார். பின்னர் எதற்காக லஞ்சம்?




நான் எங்கள் வீட்டிற்கு வந்த மின் இணைப்பு கொடுப்பாளரிடம்(Wire man) கேட்டபோது அவர் வாதம் வித்தியாசமாக இருக்கிறது.  
  • முதலில் சொல்லும் காரணம் விலைவாசி அதிகமாகிடுச்சு
  • இரண்டாவதாக சொல்லுவது மேலே இருப்பவர்களுக்காக தான் வாங்குகிறோம் என்பது. அதாவது அந்த ஆயிரத்தி ஐநூறு ரூபாயில் மின்வாரியத்தில் வேலை செய்யும் அலுவலர்கள் எல்லாருக்கும் பங்கு உண்டாம். தெரிந்தவர் என்பதால் ரொம்ப கம்மியாம்.
  • மூன்றாவதாக சொல்லும் காரணம் தான் இந்த பதிவினை நான் எழுதுவதற்கு காரணம் எல்லாரும் வாங்குறாங்க நானும் வாங்குறேன் அல்லது வாங்க வைக்கபடுகிறேன் என்பது அது.இந்த மின்வாரிய ஊழியர் மாநகராட்சியில் குடிநீர் குழாய் அமைப்பதற்கு அவர் கொடுத்த லஞ்சத்தினை பற்றி சொல்லுகிறார். அதாவது இது ஒரு தொடர் சங்கிலி போல் நீளுகிறது.இந்த சங்கிலி தொடர் லஞ்சம் வாங்க முடியாத அல்லது வாய்ப்பு அற்ற துறையில் உள்ளவர்களால் சில நேரம் உடைகிறது.
 உதாரணத்திற்கு ஒரு காவல்துறையில் வேலை பார்க்கும் ஒரு அலுவலர் மாநகராட்சியில் தன்னுடைய வேலை எளிதாக நடைபெற லஞ்சம் கொடுக்கிறார் (சத்தியமாக காவல்துறைக்கு லஞ்சம் வாங்கி தான் பழக்கம், கொடுத்து இல்லை என்பது இப்போதைக்கு வேண்டாம்) என்று வைத்து கொள்வோம். இந்த காவல்துறை அலுவலர் இதனை ஈடுகட்ட வேறு யாரிடமாவது லஞ்சமாக வாங்குவார். அப்படி கொடுத்தவரும் ஒரு அரசு ஊழியர் என்றால் அவர் என்ன செய்வார். காவல்துறை அலுவலர்க்கு கொடுத்த பணத்தை வேறு எங்காவது லஞ்சமாக வாங்கி ஈடு செய்கிறேன் என்பார். ஆக மொத்தத்தில் இதுவரை லஞ்சம் வாங்காத யாரேனும் அரசு துறையில் இருந்தால் அவர்களை லஞ்சம் வாங்க தூண்டுகிறார்கள். அரசு ஊழியர்கள் சரி வாங்குகிறார்கள். மற்றவர்கள் என்ன யோசிக்கிறார்கள் என்றால் இவர்களிடமிருந்தோ அல்லது தங்களிடம் யார் லஞ்சம் கொடுப்பார்கள் என்றோ தான் பார்க்கிறார்கள்.

ஒரு வேளை உங்களிடம் ஒரு வேலைக்கு லஞ்சம் பெறும் ஒருத்தர் இருக்கும் துறையில் இருந்து யாரேனும் ஒரு வேலைக்கு உங்களிடம் யாரேனும் வந்தால் நீங்கள் லஞ்சம் கேட்பீர்களா இல்லையா?

Popular Posts