நெடுஞ்சாலை உணவகங்களில் நடக்கும் பகல் கொள்ளை

நம்மில் பலர் இந்த விஷயத்தை கவனித்து இருக்கலாம், ஒரு சிலர் இதில் ரொம்ப அவஸ்தைகளை பட்டு இருந்திருக்கலாம். அந்த ஒரு விஷயம் நெடுஞ்சாலை உணவகங்கள். நெடுஞ்சாலைகளில் நெடும்தூரம் பயணிக்கும் பயணிகள் தங்களை பயணத்தின் களைப்பில் இருந்து மீட்டு கொள்ளவே மேலை நாடுகளில் நெடுஞ்சாலை உணவகங்கள் ஏற்படுத்தப்பட்டன. நமது முன்னோர்கள் கட்டிவைத்த சத்திரங்களும் அதனை போன்றதாகவே இருந்துள்ளன. ஆனால் நமது கலாசாரத்தில் சத்திரங்கள் முதலில் இலவசமாகவும் பின்பு குறைந்த கட்டணத்தில் பயணிகளுக்கு உணவளித்து இருந்துள்ளனர்.


அப்படி இருந்த தமிழகத்தில் நெடுஞ்சாலை உணவகங்கள் என்ற பெயரில் பயணிகளின் ரத்தத்தை உறிஞ்சும் ஒரு சில உணவகங்கள் உள்ளன. தொழுதூர், விழுப்புரம், கொட்டாம்பட்டி, திருமங்கலம், அருப்புகோட்டை போன்ற இடங்களின் அருகே நடக்கும் நெடுஞ்சாலை உணவகங்களில் அடிப்படை வசதிகள் எதுவும் கிடையாது. அப்படி ஒரு வேலை கழிப்பிடம் இருந்தாலும் அதில் மூக்கை பிடித்து கொண்டு தான் செல்ல வேண்டும். உள்ளே தைரியத்துடன் சென்று மீண்டவர்கள் பின்னர் அங்கே சென்றதற்கான தொற்று நோய்களில் அவதி உற்றுள்ளனர். வெளியிலே சென்று மலம், சிறுநீர் கழித்து வருவது பேருந்தில் வரும் பயணிகளுக்கு நலம். ஆனால் அதன் அருகிலே உள்ள உணவகத்தில் உணவருந்தும் பயணிகளின் நிலை?



சரி வெளிப்புறம் தான் இப்படி சுகாதாரகேடுகளின் மையமாக இருக்கிறது என்றால் உள்ளே அழுக்கில் மூழ்கி எடுத்து இருக்கும் ஒரு அறையினை போன்ற அறையில் தான் உணவு பரிமாறப்படுகிறது. அங்கு வழங்கப்படும் குடிநீர் எப்படி இருக்கும் என்று சொல்ல தேவையே இல்லை. அந்த அளவிற்கு சுகாதாரமான :-) நிலையில் தான் இந்த நெடுஞ்சாலை உணவகங்கள் இருக்கின்றன.



சரி சுற்றுப்புறமும் சூழ்நிலையும் தான் சரி இல்லை. உணவாவது நன்றாக இருக்கும் என்று பார்த்தால் அதுவும் இல்லை. நாங்கள் சுடுவது தான் தோசை, நாங்கள் செய்வது தான் பிரியாணி என்று ஒரு உணவகத்தில் கூறியுள்ளனர். இரவு நேரத்தில் இந்த இரண்டு மட்டுமே அந்த உணவகத்தில் இருக்கும். யார் கேட்டாலும் அது மட்டும் தான் தருவார்கள்.



முட்டை குருமா விலை: 25 ரூபாய்

தோசை ஒன்று விலை :20 ரூபாய்



இங்கு வெளியிடங்களிலோ இல்லை நமது அருகே இருக்கும் உணவகங்களில் இப்படி விலைக்கு நன்றாக இல்லாத உணவு இருந்தால் நாம் என்ன செய்வோம். நாம் அமைதி பேர்வழியாக இருந்தால் அடுத்த முறை இந்த உணவகத்திற்கு வருவதை தவிர்ப்போம்.(அடுத்தவர்களிடமும் இதையே சொல்லி வர வேண்டாம் என்று கூறுவோம்) கொஞ்சம் தைரியமான ஆளாக இருந்தால் அங்கேயே சண்டை போட்டு செல்வோம். ஆக எப்படி இருந்தாலும் அங்கே வரக்கூடியவர்கள் எண்ணிக்கை குறையும். ஆனால் இந்த உணவகங்களில் அப்படி எதுவும் நடக்காது. அடுத்த உணவகத்தில்(உங்களுக்கு பிடித்த நெடுஞ்சாலை உணவகத்தில் பேருந்து நிற்காது) சென்று சாப்பிட வாய்ப்பு கிடையாது. நடுக்காட்டில் உள்ள இவர்களின் உணவகங்களில் சண்டையெல்லாம் போட முடியாது.

அப்படி போட்டுவிட்டு உங்களால் பாதுகாப்பாக செல்வது கடினம்.

இந்த உணவங்கள் எல்லாம் ஆளும்கட்சியில் இருப்பவர்களால் மட்டுமே நடத்தபடுகின்றன.(திமுக, அதிமுக கட்சி பிரமுகர்களால் அந்த அந்த கட்சிகள் ஆட்சியில்)இங்கே நடக்கும் கொள்ளைகளை யாரும் கண்டுகொள்வதும் இல்லை கேட்பதற்கும் யாரும் இல்லை என்ற நிலையே உள்ளது.


இது சம்பந்தமாக யாராவது இதற்கு முன்னர் வழக்கு பதிவு செய்து வழக்கில் வெற்றி பெற்று இருக்கிறார்களா என்று தெரியவில்லை.

15 Response to "நெடுஞ்சாலை உணவகங்களில் நடக்கும் பகல் கொள்ளை"

  1. விழுப்புரத்தில் நான் அனுபவித்துள்ளேன் இக்கொடுமையை...

    கொடுமைங்க... நானும் அனுபவிச்சு இருக்கேன்...

    இது தொன்றுதொட்டு நடந்துவருகிற கொள்ளை. ஆட்சி மாறும்போதெல்லாம் இந்த மோட்டல்களின் பெயர்களும் மாறுவதைக் கவனித்திருக்கிறேன். போதாக்குறைக்கு, கழிப்பறையில் அவர்கள் காசு வசூலிக்கிற கொடுமை வேறு! பகிர்வு நன்று

    முட்டை குருமா நீங்கள் கேட்காமல் வந்து வைத்து விடுவார்கள்... இந்த கொடுமைக்கு பசியோடு இருக்கலாம்.,. அந்த தோசையை வாயிலேயே வைக்க முடியாது...அந்த அளவுக்கு புளிப்பு...

    நான் இந்தக் கொடுமையை அடிக்கடி சந்திக்க நேரிடும். இப்பொழுதெல்லாம், இந்த மாதிரி பயணங்களில் வீட்டிலிருந்தே, இரவு உணவை தயார் செய்து எடுத்து சென்று விடுகிறேன். வெளியூரிலிருந்து திரும்பும்பொழுது பிஸ்கட்ஸ், கேக்ஸ், பழங்கள் என்று வாங்கி வைத்து கொண்டு அட்ஜஸ்ட் செய்ய வேண்டியிருக்கிறது. அங்கெல்லாம் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நலம்.

    ஒன்றுமே இல்லாத டாய்லட்டுக்கு இப்பொழுதெல்லாம் மூன்று ரூபாய் வசூலிக்கிறார்கள்!!!:(

    MUTHU says:

    அப்படி என்றால் ஆட்சி மாறியவுடன் ஆளும் கட்சிகாரர்களுக்கு குத்தகை மாற்றித் தந்து விடுவார்களா…? அரசியல்வாதிகளின் கைகளில் என்று கூறுங்கள் என்பரே.

    தமிழ்நாட்டுலே தான் இந்த அடாவடி எல்லாம். இதில் அரசியல்வாதிகளுக்கும் கட்சிக்காரங்களுக்கும்கூட பங்கு இருக்காமே:(

    வரவர எதைத்தான்..............சீச்சீ.

    வடக்கே பஞ்சாப் மாநிலத்தில் தாபாக்களும் ரெஸ்ட்டாரண்டுக்களும் அருமையா இருக்கு. கழிவறை வசதி முக்கியம் என்பதால் நானும் பயணங்கள் பற்றி எழுதும்போது அதைக்குறிப்பிடத் தவறுவதில்லை.

    சுத்தமா இருக்கணும் என்ற இயல்பான எண்ணம் ஏன் நம்ம பக்கம் அறவே இல்லை என்று யோசிச்சு யோசிச்சு தலைவலி வந்ததுதான் மிச்சம்:(

    கொடுமையான விஷயம் தான்!!!

    Anonymous says:

    இது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது அடுத்த நாள் பேதியும் பயணிகளுக்கு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது

    பின்னூட்டம் செய்த நண்பர்களுக்கு நன்றி. இதை தடுக்க ஏதேனும் வழி உண்டா?

    பெங்களூர்-சேலம் நெடுஞ்சாலையில் கொஞ்சம் பரவாயில்லை அடையார் ஆனந்த பவன், காமத் உபசார் இருக்கிறது.ஆனால் என்ன அரசு பேருந்துகளில் சென்றால் இவற்றில் நிறுத்த மாட்டார்கள் அவர்கள் எங்கு அவர்களை இலவசமாக கவனிக்கிறார்களோ(நீங்கள் குறிப்பிட்ட உணவகங்களைப் போலவேதான்) அங்கு நிறுத்துகிறார்கள். தனியார் ஆம்னி பேருந்துகள் மட்டுமே AAB இல் நிறுத்துகிறார்கள்.

    முதலில் பூனைக்கு மணி கட்டியதற்கு பெறுங்கள் பூச்செண்டு!

    மக்க்ள் பாதிப்புகுள்ளாகும் பல சமூகப் பிரச்சனைகளை பலவற்றை எழுதுவீர்களென்று எதிர்பார்க்கிறேன்

    அரிசி ஒரு ரூபாய்க்கும், கழிப்பிடத்துக்கு ஐந்து ரூபாய்க்கும் கொடுக்கும் நிலை தமிழகத்தில் மட்டும் தான் நடக்கும். அதுவும் விழுப்புரம் அருகே உள்ள விக்கிரவாண்டி உணவங்கங்களில் நடக்கும் கொள்ளை சொல்லி மாளாது. இளநீர் முப்பது ரூபாய்... சிகரெட் ஐந்து ரூபாய், தோசை, பரோட்டா 25 முதல் 30 ரூபாய்... நான் எழுத வேண்டும் என்று நினைத்து மறந்த விஷயத்தை தளத்தில் கொண்டு வந்ததற்கு எனது பாராட்டுகள்...

    இன்னொன்று சில்லறை பிரச்சினை...எவ்வளவு தாகத்தோடு இருந்தாலும் சரியாக சில்லறை வைத்துக் கொள்ளவில்லை என்றால் உங்களுக்கு தண்ணீர் கிடையாது. நான் சில்லறை என்று இன் குறிப்பிடுவது 10 அல்லது 20 ருபாய் தாள்கள். தரங்கெட்ட தண்ணீர் பாக்கெட்டுகள் மற்றும் உணவுகள்... நிறைய முறை அவ்வழியில் சென்றுள்ளதால் முடிந்தவரை நான் இவ் உணவகங்களை தவிர்த்து விடுவதுண்டு.

    Unknown says:

    அன்பரே,
    மானங்கெட்ட தமிழன் – இது ஒரு அருமையான பதிவு.
    நாம் புத்திசாலியாக மாறி விடுவதே இதற்கு தீர்வு.
    முன்னதாக நமது வீட்டிலோ, நமது ஊரில் நல்ல கடையில்
    கிடைத்த உணவுடன்,தண்ணீரையும் சேர்த்து பயணத்தின் போது
    சிரமம் பார்க்காது எடுத்துச்செல்வதே இதற்கு வழி.

Popular Posts