தமிழர்களைக் கொன்றொழிக்கும் சிங்கள ராஜபக்ஷேவும் அல்லக்கை காங்கிரஸ் ‘பச்சைத் தமிழர்’களும்:கு. காமராஜ்

Rajapakse and Hasan















“ராஜீவ்காந்தி கொலையை ராஜீவ்காந்தி ஆவியே மன்னித்தாலும் தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள்” இது ஒரு மாதத்திற்கு முன்பு காங்கிரஸ் எம். எல். ஏ. ஒருவர் அடித்த கமெண்ட். ஆம். உண்மைதான்.
ஆனால் ஒரு சின்ன திருத்தம். தமிழக மக்கள் ராஜீவ் காந்தியை என்றோ மறந்து விட்டார்கள்.வேறு வேலையைப் பார்க்க போய் விட்டார்கள். ஆனால் தமிழக காங்கிரஸ் கட்சியில் சில எம்.எல். ஏ. க்கள் தான் விடாப்பிடியாக ராஜீவ் காந்தியை நினைவுபடுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.ஏனென்றால் ராஜீவ்காந்தி அவர்களது அரசியல் வியாபாரத்திற்குத் தேவைப்படுகிறார். ஏனென்றால் தமிழினத்தை பூண்டோடு அழித்துக் கொண்டிருக்கும் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ஷேவுக்கும் தமிழக காங்கிரஸ் கட்சியின் சில எம். எல். ஏ. க்களுக்குமான ‘டீலிங்’ அப்படி.


அதைப் பற்றி பார்ப்பதற்கு முன்னர் இரண்டு மாத தமிழக அரசியல் நிலையைப் பார்ப்போம். ஈழத்தில் தமிழர்களுக்காக தனிநாடு கோரும் போராளிகளான தமிழீழ விடுதலை புலிகளுக்கும் சிங்கள இராணுவத்துக்குமான போர் சமீப காலங்களில் மிகவும் உச்ச கட்டத்தை நெருங்கி இருக்கிறது. இறுதிக்கட்ட போர் என்று இரு தரப்புமே சொல்லுமளவுக்கு போர் கடுமையாக இருக்கிறது. வாழ்வா, சாவா? என்ற நிலையில் தமிழர்கள் அங்கு களத்தில் இருக்கிறார்கள். பூர்வகுடிகளான தமிழ் மக்கள் அங்கு தங்கள் தாய்நாட்டிலேயே நிர்க்கதியாக இருக்கிறார்கள். தமிழ்ப் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு
உட்படுத்தப்படுகிறார்கள். தமிழ்ச் சிறுவர்கள் படிக்கும் பள்ளிகள் திட்டமிட்டு அழிக்கப்படுகிறது.



லட்சக்கணக்கான தமிழர்கள் தங்கள் நாட்டிலேயே அகதிகளாக காடுகளில் தஞ்சம் புகுந்து பாம்புகளினால் சாகும் பரிதாபம் நடைபெறுகிறது. விடுதலைப் புலிகளுடன் போர் புரிகிறோம் என்று கூறிக்கொண்டு
தன் நாட்டின் சக குடிகளான தமிழ் மக்கள் மீது சிங்கள ராணுவம் வான் வழியே குண்டு வீசிக்கொலை செய்கிறது. நாம் வாழும் உலகில் எங்குமே நடைபெறாத இத்தகைய கொடுமைகள் இலங்கையில் மட்டுமே சிங்கள ராணுவத்தால் மேற்கொள்ளப்படுகிறது. தமிழர்கள் என்ற ஒரு இனமே இருக்கக்கூடாது.அதைப் பூண்டோடு அழித்து விட வேண்டும் என்ற நோக்கில் சிங்கள ராணுவம் திட்டமிட்டு செயல்படுகிறது.



மேற்கண்ட படுபாதகச் செயலை மனித நேயமிக்க அனைவரும் கண்டித்தனர். தமிழகம் முழுவதும் மக்கள் தன்னெழுச்சியாக அக்டோபர் மாதம் தொடக்கத்தில் திரண்டனர். ஏறத்தாழ 21 ஆண்டுகளுக்குப்
பிறகு ஈழத்தமிழர் பிரச்சனையில் ஒரு சில கட்சிகள் தவிர தமிழகம் ஒரணியில் திரண்டது. மக்களின் எழுச்சியின் விளைவாக தமிழக முதல்வர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டினார். கூட்டத்தில் தமிழர்கள் மீதான ராணுவ தாக்குதலை சிங்கள அரசை நிறுத்தி வலியுறுத்தி இந்திய அரசைக் கோரியும், அதை நிறைவேற்றாத பட்சத்தில் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வது என்றும் முடிவெடுக்கப்பட்டது. (அதன்பின்பு இந்த விஷயத்தில் தீர்மானம் நிறைவேற்றிய கட்சிகள்
பதவிக்காக அந்தர் பல்டி அடித்ததையும் நிவாரண நிதி வசூல் என்று பிரச்சனை திசை மாறியதையும்) சென்னையில் இலங்கை அரசினை போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம்
நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது.



தமிழகம் முழுவதும் மக்களின் எழுச்சியான போராட்டங்கள், அதற்கு வலுசேர்க்கும் வண்ணம் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ராஜினாமா மிரட்டல், அனைத்துக் கட்சிகளின் மனிதசங்கிலி
போராட்ட அறிவிப்பு என்று ஈழத் தமிழர்க்கு ஆதரவான போராட்டங்கள் உத்வேகமடைந்த நிலையில் இலங்கை சிங்கள அரசு அஞ்சியது. தமிழ்நாட்டுத் தமிழர்களின் எழுச்சியை தன் பங்குக்கு ஒடுக்க
சிங்கள அரசு எண்ணியது. ஈழத் தமிழர்கள் ஆதரவுப் போராட்டங்களை நீர்த்துப் போகச் செய்ய நினைத்த அதன் முயற்சிக்கு தமிழக காங்கிரஸ் எம். எல். ஏ. க்கள் நன்கு பயன்பட்டனர். ஆம். சிங்கள அரசின் முயற்சிக்கு சிங்கள அதிகார வர்க்கத்தின் நீண்ட நாள் ‘நண்பர்’ ராமநாதபுரம்
தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் அசன்அலி உதவினார். ஈழ ஆதரவு போராட்டங்களை ஒடுக்க நினைத்த சிங்கள அரசின் எண்ணத்திற்கேற்ப தாளமிட்டவர்கள் தான் தமிழக காங்கிரஸ் எம். எல்.
ஏ. க்கள். ஆம் சிங்கள அரசுக்கும், தமிழ்நாடு காங்கிரஸ் எம். எல். ஏ. க்கள் சிலருக்கும் இணைப்புப் பாலமாக விளங்கியவர் அசன் அலி. அதற்கு அவர்கள் தலைவி ராஜிவ்காந்தி கொலை பயன்பட்டது.



தமிழ்நாட்டில் நடைபெற்ற ஈழத்தமிழர் ஆதரவுப் போராட்டங்களில் சிலர் ஆவேசப்பட்டோ, உணர்ச்சி வசப்பட்டோ விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதை மட்டுமே வெறும் சாக்காக வைத்துக் கொண்டு,
ஒட்டுமொத்த தமிழ் மக்களின் ஈழ ஆதரவையும் விடுதலைப் புலிகளின் ஆதரவு போராட்டம் என்றும், விடுதலைப் புலிகள் ராஜீவ்காந்தியைக் கொன்றவர்கள், ராஜீவ்காந்தி எங்கள் தலைவர். அவரைக்
கொன்றவர்களை நாங்கள் எப்படி ஆதரிப்பது? என்றும் ராஜீவ்காந்தியை கொலை செய்தவர்களை ஆதரிப்பது தேசத் துரோகம் என்றும் ஆகவே நடைபெறும் போராட்டங்கள் தேசத்திற்கு எதிரானது என்றும் ஆகவே
அதை ஆதரிக்க முடியாது என்றும் ஈழத் தமிழர் போராட்டத்தை கணிசமாக நீர்த்துப் போகச் செய்ததில் காங்கிரஸ் எம். எல். ஏ. க்களுக்கும் முக்கிய பங்குண்டு. அதன் உச்சகட்டமாக எழுந்த வசனங்கள் தான். ‘‘ராஜீவ்காந்தி கொலையை ராஜீவ்காந்தியின் ஆவியே மன்னித்தாலும் தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள்’’. என்னும் திரைப்பட பாணியிலான வசனம்.



பதவிக்காக எந்த இழி செயலையும் செய்யத் தயாராக இருக்கும் காங்கிரஸ், தாம் வெற்றி பெறுவதற்காக ஜெயலலிதா, கருணாநிதி, கம்யூனிஸ்டுகள் ஏன் பெயரளவு கொள்கை கூட இல்லாமல் நேற்று கட்சி
ஆரம்பித்த விஜயகாந்த், சரத்குமார், கார்த்திக் உட்பட யாருடனும் கூட்டு சேரத் தயாராக இருக்கும் காங்கிரசார். பதவிக்கு வந்து விட்டால் இராணுவத்திற்கு ஆயுதம் வாங்குவதிலிருந்து அனைத்திலும் ஊழல் புரிவதில் கை தேர்ந்த காங்கிரசார் 17 வருடங்களுக்கு முன் செத்துப்
போன ராஜீவ்காந்தி விஷயத்தில் மட்டும் அவர் ஆவியே மன்னித்தாலும் இவர்கள் மன்னிக்கத்தயாராக இல்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது. உண்மையிலேயே இவர்கள் ராஜீவ்காந்தி பேரிலான தீராத அன்பின்பால் குடம் குடமாய் கண்ணீர் வடிக்கிறார்களா? என்று பார்த்தால் அது நீலிக்
கண்ணீர் என்று நடந்தவற்றை ஆராயும் போது தெரிகிறது.



ஆம். சில ஓட்டுக்கள் வாங்குவதற்காக கவர்ச்சி நடிகை மாயாவை களத்தில் இறக்கும் காங்கிரசாருக்கு சில நூறு ஓட்டுக்கள் வாங்குவதற்காக ராஜீவ்காந்தி மரணம் பயன்படுகிறது ஆகவே களத்தில அவரை வைத்து தொடர்ந்து ஒப்பாரி வைக்கிறார்கள் என்று மேலோட்டமாக கருத முடியாது. ராஜீவ்காந்தி அவர்களுக்கு இன்னும் ‘மதிப்பு’மிக்க தலைவர். அதை அவர்களுக்கு ராஜபக்ஷே ராமநாதபுரம்
தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அசன் அலி மூலம் புரிய வைத்தார். அசன் அலிக்கும் மகிந்தா  ராஜபக்ஷேவுக்கும் இடையேயான தொடர்பு பற்றி இப்பொழுது நாம் பார்ப்போம்.



ராமநாதபுரம் சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர் அசன் அலிக்கும், இலங்கையின் தற்பொழுதைய அதிபர் ராஜபக்ஷேவுக்கும் நீண்ட காலமாக ‘நெருக்கமான’ தொடர்பு உண்டு. ஆகஸ்டு மாதம் 2005
ஆம் வருடம் இலங்கையின் பிரதமராக இருந்த ராஜபக்ஷே சுதந்திரக் கட்சி சார்பாக அதிபர் பதவி வேட்பாளராக நிறுத்தப்படுகிறார். அப்பொழுது அவருக்கு வாழ்த்துக் கூறி அசன் அலி கடிதம் எழுதுகிறார். அவரது கடிதத்துக்கு நன்றி தெரிவித்து மகிந்த ராஜபக்ஷே கடிதம் எழுதுகிறார்.
அப்பொழுது அசன் அலி சட்டமன்ற உறுப்பினர் கிடையாது. காங்கிரஸ் கட்சியில் உறுப்பினரா இல்லையா என்பது குறித்து தெரியவில்லை. அதன்பின்பு மகிந்த ராஜபக்ஷே இலங்கை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அப்பொழுது அசன் அலிக்கு வாழ்த்துத் தெரிவித்து மகிந்த ராஜபக்ஷே கடிதம் எழுதுகிறார் (கடிதம் பார்க்க). இலங்கை எதிர்க்கட்சிகள் தலைவராக இருக்கும் ரணில் விக்கிரமசிங்கேவும் அசன் அலியை வாழ்த்துகிறார். மற்றும் இலங்கையின் முக்கிய அமைச்சர்கள்
மற்றும் உயர் அதிகார வர்க்கத்தினர் பாராட்டுத் தெரிவிக்கின்றனர்.
(ஹசன் அலி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் ராஜ்பக்ஷ எழுதிய வாழ்த்துக்
கடிதம்)



இங்கு நம் முன் எழும் வினாக்கள்



1) பிரதமராக இருக்கும் ராஜபக்ஷே சுதந்திரக் கட்சி சார்பில் அதிபர் பதவி வேட்பாளராக நிறுத்தப்படும் பொழுது அசன் அலி வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதுகிறார். அசன் அலி எந்தப் பதவியிலும் அப்பொழுது இல்லை. சென்னையில் வாழும் சாதாரண இந்தியக் குடிமகன். ஆனால் அவர் ராஜபக்ஷேவுக்கு வாழ்த்துச் சொல்ல வேண்டிய அவசியம் என்ன?



2) அசன் அலி சட்டமன்ற உறுப்பினராக தேர்வு பெற்றதும் அவருக்கு இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ஷே மற்றும் ரணில் விக்ரமசிங்கே ஆகிய இருவரும் வாழ்த்துச் சொல்கின்றனர். தமிழகத்தின் ஒரு சாதாரண சட்டமன்ற உறுப்பினருக்கு இன்னொரு நாட்டின் அதிபரும், எதிர்க்கட்சித் தலைவரும் போட்டி போட்டு வாழ்த்துச் சொல்ல வேண்டிய அவசியம் என்ன?



3) காங்கிரஸ் கட்சியில் இங்கு பலபேர் சட்டமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டி போட காத்திருக்கையில் கட்சிக்கு சம்பந்தமில்லாத அசன் அலிக்கு சீட் கிடைத்தது எப்படி?



4) ராமநாதபுரம் தொகுதியைச் சேர்ந்த ராமச்சந்திர வன்னி, மலேசியா பாண்டியன் போன்றோருக்கு தான் சீட் கிடைக்கும் என்று அங்குள்ளவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில் திடீரென்று, தொகுதிக்கு தொடர்பில்லாத அசன் அலிக்கு சீட் எவ்வாறு கிடைத்தது?



அசன் அலி தமிழக சட்டமன்ற உறுப்பினரான பின்பு இலங்கையின் அதிகார மட்டத்தினருடன் தொடர்பு அதிகரிக்கிறது. தனது நட்பு வட்டாரத்தை காங்கிரஸ் எம். எல். ஏ. க்களில் அதிகரித்து வந்தார். வேலூர் எம். எல். ஏ. ஞானசேகரன் போன்றோர் இதில் அதிக நெருக்கமாகின்றனர். ‘ஒற்றுமை’யாக இருக்கின்றனர். தங்களுக்குள் அனைத்தையும் ‘பகிர்ந்து’ கொள்கின்றனர்.



இந்த நிலையில் தமிழகத்தின் தற்பொழுதைய சம்பவங்களை ஒட்டி ஈழத்தமிழர் ஆதரவு அலை அதிகரிக்கவே அதனைக் குறுக்குச் சால் ஓட்டிக் கெடுக்கும் விருப்பத்தின் விளைவாக 29. 10. 2008 அன்று ராஜபக்ஷே அசன் அலியுடன் பகல் 11 மணிக்கு பேசுகிறார். தமிழகத்தில் நடைபெறும் விஷயங்கள் பரிமாறப்படுகின்றன. தொலைபேசி பேச்சுக்குப் பிறகு அசன் அலி துரிதமாகச் செயல்படுகிறார். காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்கிறார். அவரே அனைத்து காங்கிரஸ் எம். எல். ஏ. க்களுக்கும் அவரது தொலைபேசியில் இருந்து பேசுகிறார். அதன்படி 23 நவம்பர் 2008 அன்று காங்கிரஸ் எம். எல். ஏ. க்கள் கூட்டம் கூட்டப்படுகிறது.



எதிர்பார்த்தபடியே வேலூர் ஞானசேகரன் எம். எல். ஏ. உட்பட பலரும் வஞ்சனை இன்றி வீர உரை நிகழ்த்துகின்றனர். ஈழத்தமிழர்க்கு ஆதரவாக பேசுபவர்கள் கடுமையாக விமர்சிக்கப்படுகிறார்கள். மனித சங்கிலி போராட்டத்திற்கு ஏற்பாடு செய்த தமிழக முதல்வர் கடுமையாக விமர்சனம் செய்யப்படுகிறார். கூட்டத்திற்குப் பிறகு தமிழக காங்கிரஸ் மனித சங்கிலியில் தமிழக காங்கிரஸ் பஙகேற்கவில்லை என்ற நிலைப்பாடு எடுக்கிறது. அதற்கு அவர்களுக்கு ராஜீவ்காந்தி கொலை பயன்படுகிறது. மனித சங்கிலி போராட்டத்திற்கு பின்பு நிலவரம் மாறுகிறது. பிரணாப் முகர்ஜி வருகைக்குப் பிறகு தமிழக முதல்வர் எம். பி. க்கள் ராஜினாமா இல்லை என்ற முடிவுக்கு வரும் தமிழக முதல்வர் ஈழத் தமிழர் நிவாரண நிதி வசூல் செய்கிறார்.



அதன்பின்பு 4. 11. 2008 அன்று காலை 10 மணியிலிருந்து அசன்அலி ராஜபக்ஷேவுக்கு தொலைபேசியில் பேச முயற்சி செய்கிறார். ஆனால் பலமுறை முயன்றும் பேச முடியவில்லை. அதன்பின்பு காலை 12 மணிக்கு ராஜபக்ஷே நேரடியாக அசன் அலியின் கைபேசி 9444112374 எண்ணுக்கு பேசுகிறார்.தொலைபேசியில் ராஜபக்ஷேவுடன் பேசியதை அசன் அலியே குமுதம் ரிப்போர்ட்டர் நிருபரிடமும், ஜூனியர்விகடன் நிருபரிடமும் பகிரங்கமாக ஒப்புக் கொண்டிருக்கிறார். ஆகவே அதற்கு ஆதாரம் தேவையில்லை. ஏறத்தாழ 25 நிமிடம் பேசிய பின்பு அசன் அலி சக தமிழக காங்கிரஸ் எம். எல்.ஏ. க்களுடன் பேசுகிறார். அதைத் தொடர்ந்து அன்றே தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதுகிறார். கடிதத்தில் கூறப்பட்டுள்ள வாசகங்கள் மிக முக்கியமானது.



‘‘இலங்கைத் தமிழர் பிரச்னையைத் தீர்க்க ஒரு தூதுக்குழு அமைத்து இலங்கை அரசிடம் பேச்சுவார்த்தை
(!) நடத்தி தீர்வு காணுமாறு வலியுறுத்துகிறார். அந்தத் தூதுக்குழுவில் தன்னையும் இணைத்துக்
கொள்ளுமாறு வலியுறுத்துகிறார். மேலும் இலங்கை அதிபர் ராஜபக்ஷே மற்றும் இலங்கை அமைச்சர்களிடமும்
மற்றும் இலங்கை அதிகாரிகளிடமும் பேசி 50 ஆண்டுகளாகத் தீராத இலங்கைப் பிரச்சனையைத் தான்
தீர்த்து வைப்பதாக நமது முதல்வருக்கே உத்தரவாதம் (!) அளிக்கிறார். அதேபோல அக்குழுவிற்கு
தேவையான அனைத்து வசதிகளையும் தானே செய்து தருவதாக உறுதிமொழி அளிக்கிறார். ’’



(ஹசன் அலி முதல்வர் கருணாநிதிக்கு எழுதிய கடிதம்)



இங்கு நமக்கு எழும் வினாக்கள்



1) ஒரு தமிழக சட்டமன்ற உறுப்பினர் எவ்வாறு தமிழனைப் பூண்டோடு அழிக்கும் இன்னொரு நாட்டு அதிபருடன் சரளமாகப் பேச முடிகிறது?



2) அசன் அலி பேசுவது அவரது கட்சித் தலைவி சோனியாவுக்குத் தெரியுமா? இந்திய நாட்டின் பிரதமர் மன்மோகன் சிங்குக்குத் தெரியுமா? நமது தமிழக முதல்வருக்குத் தெரியுமா?



3) மேற்கண்ட அனைவருக்கும் தெரியும் என்றால் இலங்கைத் தமிழர் பிரச்சனையில் மத்திய அரசு தலையிட முடிவு செய்துள்ளதா? அவ்வாறு தலையிட முடிவெடுத்து அதற்காக வெளியுறவுத் துறை அமைச்சகம் இந்திய அரசின் அதிகாரபூர்வ பிரதிநிதியாக ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் அசன் அலியை நியமனம் செய்துள்ளதா?



4) அவ்வாறு இல்லாமல் யாருடைய அனுமதியும் பெறாமல் யாருக்கும் தெரியாமல் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் அசன் அலி பேசியிருந்தால் அதற்கு என்ன தண்டனை?



5) சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளுடன் நெருக்கமான உறவு வைத்துள்ள இலங்கை அதிபருடன் அசன் அலி பேசுவதை எப்படி சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியும்? ஒரு சட்டமன்ற உறுப்பினர் தான் பதவி ஏற்கும் பொழுது எடுத்துக் கொண்ட உறுதிமொழிக்கு மாறாகச் செயல்பட்டுள்ளார். அதற்கு என்ன தண்டனை?



6) 3. 11. 2008 அன்று 12 மணிக்கு ராஜபக்ஷேவுடன் பேசிய உடன் தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதுவதன் காரணம் என்ன?



(ஹசன் அலி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் ரணில் எழுதிய வாழ்த்துக்
கடிதம்)



7) கடிதத்தில் இந்திய தூதுக்குழு இலங்கை சென்றால் அனைத்து உதவிகளையும் தானே செய்து தருவதாக எவ்வாறு உத்தரவாதம் அளிக்க முடிகிறது? அசன் அலிக்கு அங்கு அதிகார மட்டத்தின் அனைத்து நபர்களுடனும் நட்பு உண்டா?



8) அசன் அலி காங்கிரஸ் கட்சி எம். எல். ஏ. க்கள் கூட்டத்தை கூட்டுவதற்கு தனது தொலைபேசியில் இருந்து அனைத்து எம். எல். ஏ. க்களுக்கும் பேசுகிறார்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவரைத் தாண்டி ராஜபக்ஷேவின் நண்பருக்கு இதில் என்ன அக்கறை?



9) ராஜபக்ஷேஉடன் பேசிய பின்பு முதல்வருக்கு அன்றே கடிதம் எழுதும் அசன் அலி அதில் இலங்கை பிரச்சனை தீர அனைத்துக் கட்சி தூதுக் குழுவை அமைக்க வலியுறுத்துகிறார். இது அவர் விருப்பமா? இல்லை தொலைபேசியில் பேசிய ராஜபக்ஷே விருப்பமா?



10) ஏறத்தாழ ஐம்பது ஆண்டு காலம் நீடிக்கும் இலங்கை பிரச்னையில் இங்கிருந்து செல்லும் தூதுக்குழு பேசி தீர்க்கும் என்று முதல்வருக்கு உத்திரவாதம் அளிக்கிறாரே? இது உண்மையான விருப்பமா? அல்லது பேச்சு வார்த்தை என்று ஒரு பக்கம் இழுத்தடித்துக் கொண்டு மறுபக்கம் தமிழனைக் குண்டு வீசிக் கொலை செய்யும் ராஜபக்«க்ஷவின் விருப்பமா?



11) அசன் அலி மட்டும் ராஜபக்ஷே உடன் நட்பு வைத்துள்ளாரா? பிற காங்கிரஸ் எம். எல். ஏ.க்களுக்கும் தொடர்பு உள்ளதா?



12) விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசினார்கள் என்ற ‘குற்றத்திற்காக’ வைகோ, சீமான், அமீர் போன்றோர் கைது செய்யப்பட்டு வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் தமிழனைக் கொலை செய்யும் சிங்கள அதிபர் ராஜபக்ஷே உடன் தமிழக காங்கிரஸ் எம். எல். ஏ. க்கள் யாருக்கும் தெரியாமல் ‘கள்ள உறவு’ வைத்துள்ளனரே? அதற்கு என்ன தண்டனை?


(ராஜபக்ஷ பிரதமராக இருந்தபோது எழுதிய கடிதம்)



13) அசன் அலி இந்தியாவிற்கான இலங்கை துணை தூதர் அம்சா உடன் எப்பொழுது பேசினாலும் சிங்களத்தில் மட்டும் பேசுகிறாரே. அதற்கு என்ன காரணம்? இருவருக்கும் தாய்மொழி தமிழாக இருந்தும் வேற்று மொழியில் பேச என்ன காரணம்?



இதுபற்றி யாரும் அசன் அலியிடம் வினா எழுப்பினால் எந்த மொழியில் பேசினால் என்ன? என்று எதிர்கேள்வி கேட்கிறார். நாம் கேட்பது இதுதான். எந்த மொழியில் பேசினால் என்ன என்று கூறுபவர் தமிழ்மொழியில் ஏன் பேச மறுக்கிறார் என்பதுதான். பேசும் ‘ரகசியம்’ அருகிலிருப்பவர்களுக்கு வெளிப்பட்டு விடும் என்பதாலா?



14) இலங்கை துணைத் தூதர் அம்சா இங்கு ஒவ்வொரு மாதமும் வெவ்வேறு பெயர்களில் உல்லாச விடுதிகளிலும், நட்சத்திர ஓட்டல்களிலும் நடத்தும் பல்சுவை விருந்துகளில் பங்கேற்கும் பத்திரிகையாளர்கள் யார் யார்? அதில் எந்தெந்த காங்கிரஸ் எம். எல். ஏ. க்கள் பங்கேற்கின்றனர். அதில் என்னென்ன ‘பரிமாறப்’படுகின்றன? இது போன்ற பல வினாக்கள் நம்முன் எழுகின்றன. ஆனால் யாரிடமும் பதில்தான் இல்லை. வாசகர்களாகிய தாங்கள் பதிலை இந்நேரம் யூகித்திருப்பீர்கள்.



ஈழத்தமிழர் பிரச்னையில் இன உணர்வாய் இங்கு எழுச்சி ஏற்படும் பொழுதெல்லாம் அசன் அலி,வேலூர் ஞானசேகரன் மற்றும் சில காங்கிரஸ் எம். எல். ஏ. க்கள் ராஜீவ்காந்தி கொலையைச்சாக்காக வைத்துக் கொண்டு ‘அதீத’ ஆர்வம் காட்டுகின்றனர். ஈழத்தமிழர்க்கு ஆதரவான போராட்டங்களைக் கொச்சைப்படுத்துகின்றனர். குறுக்குச் சால் ஓட்டி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துகின்றனர். உண்மையில் ராஜீவ்காந்தி மீதான பற்று காரணமல்ல என்று அசன் அலி மகிந்தா ராஜபக்ஷே தொடர்பைப் பார்த்தாலே புரிகிறது. தமிழர்கள் அங்கு தனது இனத்தைப் பூண்டோடு அழிக்கும் சிங்கள ராணுவத்தை எதிர்த்து களத்தில் நின்று போராடுகிறார்கள். அவர்கள் தங்களுக்கு பெரும்பாலாக நினைப்பது இங்குள்ள தமிழனின் தார்மீக ஆதரவைத்தான்.



ஆனால் இங்கோ சில சில குரல்களைத் தவிர்த்து கனத்த மௌனம் நிலவுகிறது. குரல் கொடுக்கும் கொஞ்சப் பேரும் கொச்சைப்படுத்தப்படுகிறார்கள். தமிழக காங்கிரசாரோ ராஜிவ்காந்தி கொலையை முகமூடியாக அணிந்து கொண்டு தமிழனைப் பூண்டோடு அழிக்கும் மகிந்த ராஜபக்ஷேஉடன் கள்ள உறவு வைத்துக் கொண்டு குறுக்குச்சால் ஓட்டுகின்றனர். குழி பறிக்கின்றனர். ஒரு காலத்தில் பெரியார் போன்ற தலைவர்கள், இருந்த தமிழக காங்கிரஸ் இன்று சிங்கள அதிபர் ராஜபக்«க்ஷவின் ஆலோசனை கேட்டுச் செயல்படும் நிலைக்கு மாறிவிட்டது என்பது எவ்வளவு சீரழிந்த நிலைக்கு தமிழக காங்கிரஸ் சென்றுவிட்டது என்பதை அறியலாம்.



இறுதியாக ஒன்று மனித சங்கிலிப் போராட்டத்தில் பங்கேற்பதில்லை என்று தமிழக காங்கிரஸ் அறிவித்ததற்குப் பின் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அசன் அலி இவ்வாறு வருத்தப்பட்டார்.எங்களை எல்லாரும் அம்மா (ஜெயலலிதா) காங்கிரஸ் என்று கூறுகிறார்கள். ஆனால் அவ்வாறு இல்லை என்று வருத்தப்பட்டார். அது தவறு. அவர்களை சிங்கள காங்கிரஸ் என்று அழைப்பதே ஏகப் பொருத்தம்.அதைத்தான் அசன் அலி உள்ளிட்ட அவரது ஆதரவு எம். எல். ஏ. க்களும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வர்.


எப்படியெல்லாம் சிண்டு முடியுறாங்க

சென்னையில் புத்த பிட்சுகளின் சேவை மையத்தில் நடந்த தாக்குதலை கண்டிக்க வேண்டியது ஒரு பத்திரிக்கையின் கடமையாக இருக்கலாம். ஆனால் வேறு யாரை காரணம் சொல்லலாம் என்பதில் கூட அரசியல் நடத்துகிறது தினமலர்.நேற்று காலை வரை  இந்த சம்பவம் தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை.

தினமலர் இதனை போன்று செய்தி வெளியிட்ட பின்னர் ஆட்சியில் இருப்பவர்களுக்கு ஒரு பயம் வந்துள்ளது. விடுதலை  புலிகள் நடமாட்டம்  தமிழ்நாட்டில் இருக்கிறது என்று யாரேனும் குற்றம் சாட்டி விடுவார்கள் என்று பெரியார் திராவிட கழகத்தை சேர்ந்த ஏழு பேர் கைது செய்யப்பட்டனர்.என்னுடைய கேள்வி அவர்கள் தான் உண்மையில் இந்த தாக்குதல்களை நடத்தியவர்களா? இல்லை யாரையாவது இந்த வழக்கில் சேர்க்க வேண்டும் என்று கைது செய்துள்ளார்களா?
அப்போ இந்த சம்பவத்திற்கும் பழ.கருப்பயாவை தாக்கியவர்களுக்கும் சம்பந்தம் இல்லையா?

மீனவர் படுகொலைகளும் நடக்க போகும் அதிசயங்களும்

தமிழ் நாட்டின்  தேர்தல் பலரை முழிக்க செய்கிறது. நாடுகளையே பேச செய்யலாம் .உதாரணங்கள் கீழே உள்ளன .
  • சமீபத்தில் இலங்கை கடற்படைக் கும்பலால் படுகொலை செய்யப்பட்ட நாகை மாவட்ட மீனவர் ஜெயக்குமாரின் குடும்பத்திற்கு இன்று நேரில் சென்று ஆறுதல் கூறினார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா. மேலும், ஜெயக்குமாரின் குழந்தைகளின் படிப்புச் செலவையும் அதிமுக ஏற்கும் என்று அவர் அறிவித்தார்.
  • சென்னை எழும்பூரில் உள்ள இலங்கை மகாபோதி சங்கத்தின் மீது நடந்த தாக்குதலைத் தொடர்ந்து, தமிழக மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் வந்தாலும் கூட அவர்களை சுட மாட்டோம், தாக்க மாட்டோம் என்று இலங்கை கூறியுள்ளது.மகாபோதி சங்கத்திற்குள் புகுந்த சிலர் அதிரடித் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் புத்த பிக்குகள் சிலர் காயமடைந்தனர். அலுவலகமும் சூறையாடப்பட்டது. இந்த சம்பவத்தால் இலங்கை அதிர்ச்சி அடைந்துள்ளது. சிங்களர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று அந்த நாடு இந்தியாவைக் கேட்டுக் கொண்டுள்ளது.
இதுவரை ஜெயலலிதா ஒன்றும் பேசவில்லை என்றவர்களுக்கு பதிலடியாக அவர் மீனவர் குடும்பங்களை நேரில் சந்தித்து பேசியுள்ளார். ஆனால் என் கேள்வி இது தான். இந்த பிரச்சினையில் உங்களின் கருத்து நான் கேட்கவில்லை. நீங்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வீர்கள் இதற்காக. நீங்களும் மீனவர்கள் எல்லை தாண்டி சென்று மீன் பிடிக்கிறார்கள் என்பீர்களா? இல்லை கட்சதீவை மீட்க முயல்வேன் என்பீர்களா? அவர்கள் உங்கள் பார்வையிலும் பேராசைக்காரர்களா என்ன?

தமிழ்நாட்டில் ஒவ்வொரு சம்பவம் நடக்கும்போதும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவானவர்களை நோக்கி ஏதேனும் வழக்கு பதிவு செய்யப்படும். அல்லது புனைவு கதை ஒன்று எல்லாருக்கும் முன்னர் வெளிவரும். ஆனால் தற்போது அத்தி பூத்தாற்போல இலங்கை மகாபோதி சங்கத்தின் மீது தாக்குதல் நடந்தும் ஒருத்தரை நோக்கியும் காவல்துறையின் கை நீளவில்லை. ஒருவேளை பாரதிராசா, பழ. கருப்பையா ஆகியோரின் மீது தாக்குதல் நடத்திய அதே குழு தான் இந்த தாக்குதலையும் நடத்தியதோ? அரசின் செயல்கள் ஒன்றை மறைக்க மற்றொரு தவறை செய்யும் அணுகுமுறையாகவே உள்ளன. இந்த தாக்குதல் நடத்தியவர்கள் ஈழத்தமிழர் ஆதரவு பெற்ற அல்லது ஈழத்தமிழர்களை ஆதரிக்கும் யாரும் செய்யவில்லை. அப்புறம் யார் செய்தார்கள்? முதல்வருக்கு தான் வெளிச்சம் 

எந்த ஒரு விடயமும்(சம்பவம் அல்லது அசம்பாவிதம் ) வரும்போது ஒவ்வொரு கட்சியினரும் அதை எப்படி பயன்படுத்துகின்றனர் என்பதில் தான் அவர்களின் சாமர்த்தியம் இருக்கிறது. ஜெயலலிதாவினால் பாதிக்கப்பட்ட மீனவர்களை சந்தித்து ஆறுதல்கள் வேண்டுமானால் கூறலாம். ஆட்சியில் இருப்பவர்களால் மட்டுமே ஒரு தாக்குதலையும் நடத்தி காவல்துறை பதில் சொல்லாதவாறு செய்து பிரச்சினைகளை ஊற அல்லது ஆற போட முடியும். ஒருவேளை இந்த பிரச்சினை தொடர்ந்து ஆளும்கட்சிக்கு தலைவலியாக இருந்தால் யாரும் நினைக்காத அதிசயங்களும் இதில் நடக்கலாம். யார் கண்டது ராஜபக்ஷேவே நேரில் கதை சொல்ல வரலாம் நண்பர்களை காப்பாற்ற. 

கருணா VS கருணா

கருணா(நிதி)கருணா(அம்மான்)
உலகதமிழினத்திற்கு துரோகம் செய்ததால் துரோகி என்று அழைக்கப்பட்டார்இலங்கைதமிழினத்திற்கு துரோகம் செய்ததால்
துரோகி என்று அழைக்கப்பட்டார்

நான்காம்கட்ட ஈழபோரில் இவர் தமிழர்களை அழிக்கும் காரியங்களில் ஈடுபட்டு வந்த மத்திய அரசுக்கு துணை நின்றார். இவர் நினைத்து இருந்தால் தமிழின அழிப்பு தடுக்கப்பட்டு இருந்திருக்கும்.

 நான்காம்கட்ட ஈழபோரில் இவர் தமிழர்களை
அழிக்கும் காரியங்களில் ஈடுபட்டு வந்த இலங்கை அரசின் படைகளோடு ஒன்றிணைந்து புலிகளின் உத்திகளை அவர்களுக்கு கற்றுகொடுத்து
அவர்களின் தோல்விக்கும் தமிழின
படுகொலைகளுக்கும் காரணம் ஆனார்.  இவர் நினைத்திருந்தால் போரின் போக்கையே
மாற்றி அமைந்திருக்க முடியும்

ஸ்பெக்ட்ரம் ஊழல் விடயம் காங்கிரஸ் ஒத்துழைப்புடன் நடந்ததால் அவர்களை மீறி நடக்க முடியவில்லை. மீறினால் ஊழல் குற்றசாட்டில் சிக்கும் நிலைமையில் இருந்தது திமுக.

கொடுத்த பணத்தை அபகரித்து அது புலிகளின்
தலைமை வரை சென்று அதனால்
கொல்லபடுவோம் என்ற நிலையில் கிழக்கு
மக்களை புலிகள் மதிக்கவில்லை என்று
வாதம்  செய்து பிரிந்து சென்றார்.

ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாடு இவருக்கு பொருந்தாது. இவர் கதை ஊர் அறிந்தது.

லசந்த விக்ரமதுங்க படுகொலை
செய்யபடுவதற்கு முதல் நாள் கருணாவை
லசந்த பார்த்துள்ளார். அப்போது கருணா
பெண்களோடு இருந்துள்ளார்.

மக்கள் பிரச்சினைகளில் இவர் கடிதம் எழுதுவதில் வல்லவர். தனக்கொரு பிரச்சினை என்றால் நேரில் சென்று பேசுவார்.
இவருக்கு கடிதம் எழுதி பழக்கம் இல்லை.
இவரிடம் சொன்ன மக்கள் பிரச்சினைகள்
எல்லாம் கிடப்பில் தான் இருக்கின்றன.
இவருக்கு தேவையானவற்றை வெள்ளை
வேன் குழு பிடுங்கி கொடுத்துவிடும்
யார் கேட்ட கேள்விகளுக்கும் பதில் அளிக்க மாட்டார். இவரே கேள்விகளை எழுதி அதற்க்கு அவருக்கு பிடித்த பதில்களை எழுதி வெளியிடுவார்.யாரும் கேள்வி கேட்டால் இவருக்கு
பிடிக்காது. அப்படி கேட்டால் மறுநாள்
அவர்கள் உயிரோடு இருப்பது இல்லை
இந்திய வரலாற்றையே திரும்பி பார்க்க வைக்கும் அளவில் ஊழல்கள் செய்தவர் ஈழத்தமிழர்களுக்காக போராடுவதாக கூறி
சிங்கள அரசிடம் சரணடைந்து துரோகியாக
மாறியவர்
எப்போது இவர் சாவார் என்று மக்கள் நினைக்கும் நிலை.

முன்னரே இவர் செத்து இருக்க கூடாதா
என்று உலகத்தமிழர்கள் நினைக்கும் நிலை.
எச்சி கையால் காக்கா ஓட்ட மாட்டார்.பெண்களை பார்த்தால் தண்ணீராக செலவு
செய்பவர்.
இன்றைக்கும் தாய்பால் குடித்து உடல்நலம் பேணும் அந்த அரசியல்வாதி இவர் தான்.இவர் இன்றும் உடல்நலம் பேண ஓடி
வருகிறாராம்
எத்தகைய சூழல் வந்தாலும் அதனை திசை திருப்புவதில் வல்லவர். ராசாவை தலித் என்று சொல்லி ஸ்பெக்ட்ரம் ஊழலில் இருந்து தப்புவிக்க முயன்றார்.தான் செய்த ஊழலில் இருந்து தப்புவிக்க
கிழக்கு வடக்கு முன்னுரிமை பற்றி பேசி
தப்புவிக்க முயன்றார்.
தமிழினம் செத்து கொண்டு இருக்கும்போது ஸ்பெக்ட்ரம்
ஊழலில் கிடைத்த பணத்தை
எண்ணி கொண்டு இருந்தவர்.
தமிழினம் செத்து கொண்டு இருக்கும்போது
வெள்ளை வேன் கடத்தல் மூலம் கிடைத்த
பணம், துணை ராணுவ படையின் மூலம்
கொள்ளை அடித்த பணம் அனைத்தையும்
எண்ணி கொண்டு இருந்தவர்
இவரை நம்பியிருந்த கட்சியினரையே காவு கொடுத்தவர்.(கிருஷ்ணன் முதலானவோர்)இவரை நம்பி வந்த புலிகளையும்
மக்களையும் சிங்களவர்களிடம் காட்டியும்
கூட்டியும் கொடுத்தார்.
இவரின் வாரிசுகளின் கட்டுப்பாட்டில் கட்சியும் ஆட்சியையும் உள்ளன.இவரின் துணைக்குழுக்கள் தனியாக பிரிந்து
இவரையே எதிர்க்கும் நிலை வந்தும்
பிள்ளையான் கட்டுப்பாட்டிலும் கருணா
கட்டுப்பாட்டிலும் மாறி மாறி இருந்த நிலை
மாறி இவர்களுக்குள் ஒரு ஒழுங்கு ஏற்பட்டு
இருவரும் இப்போது ராஜபக்ஷேவின்
அமைச்சர்களாக இருக்கின்றனர்.
மாணவர்கள் என்றால் இவருக்கு மிகவும் பிடிக்கும். மாணவர்கள் எல்லாரும் ஈழத்தமிழர்களுக்காக போராடியபோது அவர்களுக்காக காலவரையற்ற விடுமுறையை அறிவித்தவர்.மாணவர்கள் என்றால் மிகவும் பிடிக்கும்.
எங்கு எங்கு மாணவர்கள் கூடினாலும்
அங்கே புகுந்து மிரட்டல் விடுப்பதில்
இவர் வல்லவர்.
அரசு அலுவல்கள் இருக்கும்போது கலை நிகழ்சிகளில் மட்டும் கலந்து கொள்ள விரும்புவர்.கலைநிகழ்ச்சி வடக்கு கிழக்கு எங்கு
நடந்தாலும் அதில் கலந்து பாட்டுக்கள்
பாடி மகிழ்பவர்.
ஈழபோரில் இந்திய அரசு இவரை கலந்தாலோசிக்காமல் எந்த நடவடிக்கையும் எடுத்தது இல்லை.ஈழபோரில் இலங்கை  அரசு இவரை கலந்தாலோசிக்காமல் எந்த
நடவடிக்கையும் எடுத்தது இல்லை.
இவரை பற்றி விமர்சிக்கும் நபர்கள் திடீர் என்று தாக்குதல் நடத்தப்பட்டு ஒடுக்கப்பட்டனர்.(பாரதிராசா, கருப்பையா முதலானோர் )இவரை பற்றி விமர்சிக்கும் நபர்கள் திடீர்
என்று தாக்குதல் நடத்தப்பட்டு
கொல்லப்பட்டனர்.

 இவர் மூலம் இந்திய காங்கிரெஸ் அரசு காரியம் சாதித்தது.
மத்திய அரசிடம்  சரணடைந்து இவருக்கு தேவையான வேலைகளில் காரியம் சாதிப்பதே  இவருக்கு வேலையாக இருக்கிறது.

 இவர் மூலம் இலங்கை  அரசு காரியம்
சாதித்தது. யாராவது ஒருவரிடம் சரணடைந்து அடிவருடியாக இருப்பதே இவருக்கு
வேலையாக இருக்கிறது.
உலகெல்லாம் ஈழத்தில் போர் நடக்கிறது என்று சொன்ன போதும் உண்ணாவிரதம் இருந்து நான்கு
மணி நேரத்தில் பத்திரிக்கைகளில் மட்டும் போர் நிறுத்தம் வர செய்தவர்.( நாங்கள் தான் போரை நிறுத்தி விட்டோம். இதற்கு மேல் யாரேனும் இலங்கை போர் குறித்து பேசவோ இல்லை போராட்டம் நடத்தவோ கூடாது என்று போஸ்டர் வேறு வந்தது)
இவர் போர் நிறுத்தம் பற்றி இதுவரை
பேசியதே இல்லை.

வாரிசு அரசியலை இவர் வளர்த்து விட்டார். 

துப்பாக்கி கலாச்சாரத்தின் மூலம் பணம்
சம்பாதிக்கும் முறையை  இவர் 
வளர்த்துவிட்டார். 

மஞ்சபையுடன் வந்து பல ஆயிரம் மன்னிக்கவும் லட்சம் கோடிகளில் சொத்து உள்ளது

லட்சியத்துடன் வந்த இவர் பெயரில்
ஐரோப்பிய நாடுகளில் பணம் உள்ளது.
திமுகவின் திராவிட கொள்கைகள் காற்றிலும் ஏட்டினிலும் மட்டுமே இருக்கின்றனகிழக்கு புறக்கணிக்கபடுகிறது அதனால் தான்
புலிகள் அமைப்பில் இருந்து விலகுகிறேன் என்ற கருணாவின் கதை திரைக்கதைக்கு
மட்டுமே இனிமேல் உதவும் 

ஒவ்வொரு சூழ்நிலையிலும் இவர் மத்திய அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறியபோது உண்மையில் பணம் சம்பந்தமாக நடந்த பேச்சுவார்த்தைக்கு பதில் தமிழர்களுக்காக பேச்சுவார்த்தை நடத்தியதாக கதை அளந்தார்.

ஈழத்தமிழர்களின் போர் நடக்கும்போது இவர்
தனது தமிழ்மக்கள் புலிகள் அமைப்பினை
கட்சியாக பதிவு செய்து மக்களின்
சேவைக்காக கட்சி என்று இருந்த வழக்கம்
முற்றிலும் மாறி இவர்களுக்காக
மக்கள் மாறவேண்டிய நிலையை
உருவாக்கினார்கள்.

இதுவரை எந்த ஒரு மக்கள் பிரச்சினையிலும் நிரந்திர
தீர்வினை இவர் கொடுத்தது
இல்லை.
(முதல்வன் படத்தில் வரும் ரகுவரன் )
இதுவரை எந்த ஒரு மக்கள் பிரச்சினையிலும்
தீர்வினை இவர் கொடுத்தது இல்லை.
இவர்கள் சொல்லிகொடுத்த தேசியமும் இறையாண்மையும் நாட்டை படுகுழியில் கொண்டு சென்றதை தவிர மக்களுக்கு
ஒன்றும் செய்யவில்லை.இந்திய இறையாண்மைக்கும் சிங்களவனுக்கும் என்ன சம்பந்தம் என்று இதுவரை தெரியவில்லை.
இவர் சொல்லிகொடுத்த 
இறையாண்மையும்
ஒன்றிணைந்த இலங்கையும் தமிழர்களை படுகுழியில் கொண்டு சென்றதை தவிர  ஒன்றும் செய்யவில்லை.
இன்றைக்கும் துரோகம் என்பதன் அர்த்தம் இவருக்கு புரியவில்லை.துரோகம் என்பதன் அர்த்தம் புரிந்தும் அதன் விளைவு இவருக்கு
புரியவில்லை.
இவரின் வயதில் இருப்பவர்கள் மனித நேயம் பற்றி பேசுவார்கள். அப்படி ஒன்று இவரிடம் இருந்து இருந்தால் இந்நேரம் தமிழ்மக்களுக்கு ஏதேனும் செய்து அவர்களின் மனதில் இடம் பிடிக்க முயற்சித்திருப்பார்.இவரின் வயதில் இருப்பவர்கள் கடந்து வந்த பாதையின் உறுத்தல்கள்
காரணமாக நல்லது செய்ய நினைப்பார்கள். ஆனால் கருணா
ஏதேனும் நல்லது செய்தாரா என்று தெரிந்தவர்கள் கூறவும்.



ஆட்சியில் இருக்கும்போதே இவர் செத்தால் மெரினா கடற்கரையில் ஒரு இடம் கிடைக்கும். ஆனால் மக்களின் மனதில் அல்ல.எப்போது செத்தாலும் ஒரு இடம் கிடைக்கும். ஆனால் மக்களின்
மனதில் அல்ல.



முத்தமிழறிஞர், கலைஞர் என்று ஆரம்பித்த பட்டங்கள் இப்போது தமிழினதுரோகியில் முடிந்துள்ளன.சிறப்பு தளபதி, கிழக்கின் தளபதி, பிரபாகரனுக்கு நிகர் என்று தொடங்கிய பாதை தமிழின துரோகியில் முடிவுற்றுள்ளது.

இந்தியா ஒளிர்கிறது

இந்தியா கடந்த பத்தாண்டுகளில் மிகபெரிய மாற்றங்களை சந்தித்து வருகிறது.

  1. இந்தியர்களிடமிருந்து முறைகேட்ட வழிகளில் சம்பாதித்த பணம் இருபது லட்சம் கோடி மிக சிறிய நாடான லீச்டெண்ச்டீன் வங்கிகளில் போடப்பட்டு உள்ளது. இந்த நாட்டில் போடப்படும் பணத்திற்கு அந்த நாட்டில் மட்டும் வரி கட்டினால் போதும். வேறு எந்த விவரமும் மற்ற நாட்டிற்கு கொடுக்கபடாது.
  2. ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்று கொண்டு இருந்த காவல்துறையினர் எல்லாம் இப்போது லட்சத்திற்கு மாறியுள்ளனர்.
  3. பத்து வருடங்களுக்கு முன்னர் இருவத்தைந்து பைசா ஏற்றினால் சாலையில் இறங்கி போராட்டம் நடத்திய பயணிகள் எல்லாம் குளிர்சாதனம் பொருத்தப்பட்ட வண்டிகளில் மட்டுமே பயணிக்கின்றனர்.
  4. இதுவரை ஐநூறு தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். இந்த எண்ணிக்கை விரைவில் ஆயிரமாக உயர வாய்ப்பு உள்ளது.

  5. இதுவரை எழுதி வந்த திரைக்கதை வசனங்களோடு இளைஞன் படத்திற்கும் தமிழக முதல்வர் கருணாநிதி கதை வசனம் எழுதி உள்ளார். மேலும் அதிகமாக பாராட்டுவிழா கண்ட முதல்வர் என்ற பெயரையும் பெறுகிறார்.
  6. மத்திய அரசில் மட்டுமே அங்கம் வகித்து வந்த காங்கிரஸ் கட்சி மாநிலத்திலும் தங்களின் கடமையை செய்ய வாய்ப்பு கேட்கும் நிலை தமிழகத்தில் வந்துள்ளது.
  7. வாங்குபவர் விற்பவர் இடையில் நடைபெறும் பேரத்திலும் பங்கு கேட்கலாம் என மத்திய அமைச்சர் அழகிரி நிருபித்துள்ளார்.
  8. இதுவரை தமிழக முதல்வர் ஈழத்தமிழர் விடயத்தில் நாற்பது முறையும் தமிழக மீனவர்கள் விடயத்தில் பத்து முறையும் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.
  9. சென்னை சங்கமம் என்ற பெயரில் கிராமிய கலைஞர்களின் கலைநிகழ்ச்சி சென்னையில் வருடம் ஒரு முறை நடக்கிறது. இதில் கலந்து கொள்ளும் கலைஞர்களுக்கு சம்பளத்திலும் நிகழ்ச்சி ஏற்பாட்டிலும் கூட ஊழல்கள் செய்ய முடியும் என்று நிருபித்துள்ளனர்.
  10. இது வரை கேள்விபடாத அளவுக்கு ஊழல்கள் எல்லாம் இந்திய அளவில் நடைபெற்றன. அதில் ஸ்பெக்ட்ரம், காமன்வெல்த் போட்டிகள், சத்யம் என்று இந்தியா மேலும் ஒளிர்கிறது.
  11. காஷ்மீரிலும் வடகிழக்கு மாநிலங்களிலும் மட்டுமே மனித உரிமை மீறல்கள் இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கும் பரவி உள்ளன.
  12. இலங்கையில் புலிகள் இயக்கத்தினர் கிழக்கினை இழந்த பிறகு இதுவரை நூறு மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்டு உள்ளனர்.

இப்படி நான் எழுதி சென்றால் இந்த எண்ணிக்கையும் நூறினை தாண்டும் என்பதால் இதோடு இந்த எண்ணிக்கையை முடிக்கிறேன்.

இந்திய மீனவர்கள் தற்கொலை

இலங்கை அருகே கடலில் மீன் பிடித்து கொண்டு இருந்த இந்திய மன்னிக்கவும் தமிழக மீனவர்கள் இருவர் பத்து நாட்கள் இடைவெளியில் தற்கொலை செய்து கொண்டனர். தமிழக மீனவர்களான இவர்கள் ஏன் இலங்கை அருகே சென்று தற்கொலை செய்து கொண்டனர் என்று இலங்கை அரசு விசாரித்து வருகிறது. இலங்கை அதிபர் ராஜபக்ஷே இதை பற்றி பேசுகையில் தமிழக மீனவர்கள் கடலில் தற்கொலை செய்து கொண்ட விவரம் கேட்டு வருத்தமுற்றதாக கூறியுள்ளார். ஒருவேளை தற்கொலை செய்வதாக இருந்தால் இலங்கையில் உள்ள முகாம்களில் பதிவு செய்துவிட்டு வரும்படியும் கேட்டுக்கொண்டு உள்ளார். இப்படி பதிவு செய்து கொண்டு வரும் தமிழக மீனவர்களுக்கு இலங்கை அரசு முன்னுரிமை கொடுத்து மேலே அனுப்பிவைக்கும் எனவும் தெரிவித்தார். இந்த சலுகையை பற்றி உலக தமிழின தலைவரான கருணாநிதியை கேட்டபோது தமிழக மீனவர்களின் மேல் இலங்கை அரசு காட்டும் பாசம் தன்னை மெய் சிலிர்க்க செய்வதாக கூறியுள்ளார். இலங்கையில் ஏற்கனவே முகாம்களில் இருக்கும் ஈழ தமிழர்களை விட தமிழக மீனவர்களுக்கு முன்னுரிமை என்று கூறியபோது தான் மிகவும் களிப்படைந்ததாக கூறியுள்ளார்.

இன்ட்லி என்றழைக்கபடும் தமிழிஷ்யில் இருந்து நீக்கப்பட்டு உள்ளேன்

நண்பர்களுக்கு வணக்கம்,


இன்ட்லி என்றழைக்கபடும் தமிழிஷ்யில் இருந்து நீக்கப்பட்டு உள்ளேன். ஏன் என்று எனக்கு காரணங்கள் தெரியவில்லை,. தெரிந்தவர்கள் கூறவும்.



நன்றியுடன்,

சதீஷ் பாண்டியன்

ஊழல்களை தடுக்க ஊழல்வாதிகளை கொண்ட குழு

ஊழலை ஒழிப்பதற்கான சட்டப்பூர்வமான மற்றும் நிர்வாக ரீதியான ஆலோசனைகளை தெரிவிப்பதற்காக, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில், எட்டு பேர் கொண்ட அமைச்சரவை கமிட்டி, கடந்த வாரம் அமைக்கப்பட்டது.

அதில் அடங்கியுள்ளவர்கள்:
  • சிதம்பரம்
  • சரத் பவார்
  • அந்தோணி
  • வீரப்ப மொய்லி
  • கபில் சிபல்
  • மம்தா பானர்ஜி
  • அழகிரி
இந்த குழு தான் ஊழல்கள் சம்பந்தமாகவும் அரசு முடிவுகள் எடுப்பதில் நிர்வாக ரீதியாகவும் ஆலோசனை சொல்லபோகிறதாம்.தெரியாமல் தான் கேட்கிறேன். ஊழல்களை ஊழல்வாதிகளை கொண்டு தான் தீர்க்க முடியும் என்று இந்த மத்திய அரசு நினைக்கிறதோ? இதில் உள்ளவர்களில் யார் ஊழல் செய்யாதவர்? இவர்கள் எல்லாரும் சேர்ந்து என்ன முடிவு எடுப்பார்கள்? இனிமேல் மாட்டிக்கொள்ளாமல் ஊழல் செய்வது எப்படி என்று யோசிப்பார்களோ? எப்பவுமே ஒரு விடயத்தில் பத்து சதவிதம் கையூட்டு வாங்கினால் மாட்டிகொள்வது கிடையாது. தொண்ணூறு சதவிதம் வாங்கினால் மட்டுமே மாட்டுவார்கள்.(பெரிய கண்டுபிடிப்புங்க)
 
இவர்கள் எல்லாரும் சேர்ந்து சமர்ப்பிக்கும் முடிவுகள் எப்படி இருக்கும்? (இது கற்பனை என்றாலும் உண்மையாக இதே மாதிரி நடந்தால் நான் பொறுப்பல்ல)
 
  1. எந்த ஒரு முடிவையும் காங்கிரஸ் மேலிடம் தான் முடிவு எடுக்கும். அந்த அந்த பகுதிகளுக்கேற்ப தான் இந்த குழு அமைந்துள்ளது. கிழக்கு, மேற்கு என்று உள்ள திசைகள் போல அந்த பகுதிகளின் முடிவுகளுக்கு அந்த அந்த மாநிலங்களில் உள்ள கூட்டணி கட்சிகளிடம் ஆலோசனை செய்யப்படும். உதாரணம்: தமிழகம் என்றால் திமுக, கிழக்கு இந்தியா என்றால் மம்தா, மேற்கு என்றால் பவார்.
  2. கூட்டணிகட்சிகள் அடிக்கும் பணத்தில் ஒரு பகுதியை மத்திய அரசிற்கு கொடுக்க வேண்டும். அப்படி கொடுக்கும் பணம் மத்திய அரசு கூட்டணிகட்சிகள் செய்யும் ஊழல்களை கண்டுகொள்ளாமல் இருப்பதற்கு மட்டுமே. ஒருவேளை விடயம் வெளியே வந்தால் மறைக்கும் வேலைக்கு கூட்டணிகட்சிகள் தனியாக பணம் கொடுக்க வேண்டும். உதாரணம்: ஸ்பெக்ட்ரம் ஊழல்களை வெளிக்கொண்டு வருவதற்கு தூண்டிவிட்டதன் மூலமும் கணிசமான தொகை கிடைத்தது. அதை மறைக்க நடத்தப்படும் வேலைகளின் மூலமும் பணம் கிடைக்கிறது. இதன் மூலம் அரசு இயந்திரங்களுக்கு முழு நேரமும் வேலையும் சம்பளமும் கிடைக்கிறது.
  3. மாட்டிகொள்ளாமல் ஊழல் செய்வது பற்றி சிறப்பு வகுப்புகள் எடுக்கவும் ஏற்பாடுகள் செய்யப்படும். அதில் முழுநேர ஊழியர்களாக பணியாற்ற திமுக சார்பில் மூன்று பேரும் மத்திய அரசின் சார்பில் நான்கு பேரும் பணியாற்றுவார்கள்.உதாரணம்: மொத்தமாக அடிக்கும்போது பிசிறு விடக்கூடாது. கூடிய மட்டும் இடைத்தரகர்களை தவிர்க்க வேண்டும்.
  4. ஊழல்களை கண்டுபிடித்து வழக்குகள் போட்டும் வழக்குகள் போடுவதாகவும் மிரட்டும் நபர்களை குண்டர்கள் சட்டத்தில் கைது செய்ய சட்டம் இயற்றப்படும். உதாரணம்: சுப்ரமணியசுவாமி பதிவு செய்த வழக்குகளும் மிரட்டல்களும் அதிகம்.
  5. மக்களுக்கு லஞ்சம் பற்றிய விழிப்புணர்வு கொண்டு வர ஐந்து அம்ச திட்டம் லஞ்சம் கொடுத்து நடைமுறைபடுத்தபடும்.
    உதாரணம்: இலவச வேட்டிசேலை, இலவச தொலைகாட்சிபெட்டி என்று இலவசம் என்று எதைகொடுத்தாலும் ஏன் என்று கேட்காதாவாறு கொடுக்கும் தமிழக அரசின் திட்டங்கள் மற்ற மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் 
இந்த மாதிரி தீர்மானங்கள் எல்லாம் கொண்டுவரபோவதாக அறிவிப்பு வந்தாலும் ஆச்சர்யம் இல்லை.

அறிவிக்கப்படாத யுத்தம்

ஆண்டவன் கொடுக்கிறான். நான் பெற்று கொள்கிறேன் என்று நமது எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. இதில் எம்மதமும் விதிவிலக்கில்லை. நமது தலைவர்களாவது நமக்கு வழிகாட்டுவார்கள் என்று பார்த்தால் அவர்கள் இதை பற்றி திறப்பதிற்கு பதிலாக இதனை ஊக்குவிக்கும் தொலைக்காட்சிபெட்டிகளை வாங்கி வழங்கி அதில் ஒரு தொகை பார்ப்பதையே வேலையாக கொண்டுள்ளனர். நான் என்ன தான் நேராக விடயத்திற்கு வராமல் பேசினாலும் இந்த பதிவு நமது மக்கள்தொகை பற்றியது.


முன்பெல்லாம் பத்து பதினைந்து பிள்ளைகள் பெற்று கொள்ளுவார்கள். அதில் குறைந்தது இரண்டு அல்லது மூன்று குழந்தைகள் வளரும் பொது இறக்க நேரிடும். வறுமையினால் மட்டும் தான் இந்த இறப்பு என்று கிடையாது. அப்போது இருந்த நோய்கள் எல்லாம் இப்போது இல்லை. ஒரு வேளை இருந்தாலும் அதற்கான தடுப்பு மருந்துகள் எல்லாம் கிடைத்து விடுகின்றன. அதனால் முன்பு எப்படி பெற்று எடுத்து வளர்த்தார்களோ அதே வீதத்தில் போக வேண்டிய தேவை இப்போது இல்லை. முன்பு வீட்டில் பதினைந்து பேர் இருந்தால் விவசாயம் செய்ய வெளியாட்கள் எல்லாம் தேவை இல்லை. அந்த குடும்பமே அந்த வேலையே செய்ய இயலும். இப்போது பதினைந்து பேர் ஒன்றாக இருக்கும் குடும்பங்கள் ரொம்ப குறைவு. அவர்களும் விவசாயம் பார்த்து சாப்பிட்டால் வீடு தாங்காது என்பதே நிலையாக இருப்பதால் ஆளுக்கு ஒரு வேலை என்று பார்த்து கூட்டு குடும்பம் என்பதை பெயருக்காவது கடைபிடிக்கின்றனர்.




ஒவ்வொரு பிரச்சினைக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கும். ஆனால் எல்லா பிரச்சினைக்கும் எனக்கு தெரிந்து இதுவொன்றே காரணம்.




இலங்கை சுதந்திரம் அடையும்போது இருந்த அதே அளவில் தான் ஈழத்தமிழர்கள் இருக்கிறார்கள். ஆனால் சிங்களர்களோ தங்களின் மக்கட்செல்வங்களை பெருக்கியுள்ளனர். இதனால் முன்னர் இருந்த விகிதாச்சாரம் முற்றிலும் மாறியுள்ளது. ஒற்றை பிள்ளை பிள்ளை பெற்றவனுக்கும் பதினைந்து பிள்ளைகள் பெற்றவனுக்கும் ஒரே அளவு முதல் தலைமுறையில் இருப்பதாக கொண்டால் மூன்றாம் தலைமுறையில் ஒற்றை பிள்ளை பெற்றவனின் குடும்பம் மற்றவனின் குடும்பத்தை விட பல மடங்கு வசதி படைத்து இருக்கும். அப்போது வரும் தாழ்வு மனப்பான்மையால் இந்த பதினைந்து பிள்ளைகள் பெற்றவனின் குடும்பம் எப்போது அவர்களை கவிழ்க்கலாம் என்று இருக்கும்.



சாதாரண அண்ணன் தம்பிகளிடமே இந்த பிரச்சினைகள் இருக்கும்போது ஒரே தீவு இரு வேறு இனங்கள் ஒன்றாக இருக்க வாய்ப்பு இல்லை.

முன்பெல்லாம் இருந்த விலை இப்போது இல்லை. எல்லாம் மாறிவிட்டது என்று சொல்பவர்கள் முதலில் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை எத்தனை? அவர்களில் எத்தனை பேர் ஒரே இடத்தில் இருக்கிறார்கள் என்று பார்த்தால் புரியும். (இப்போதைய சூழலில் மக்கள்தொகை குறைக்க கூட்டு குடும்பமும் விவசாயமும் தான் சரியான தீர்வாகும். இதை சொல்கின்ற நானே இதை செயல்படுத்த முடியாது என்கின்ற நிலை என்று இருப்பதால் அடுத்தவர்களை குறை சொல்லவும் முடியாது. :-) ). மக்கள்தொகை பெருக்கம் என்பது எல்லாம் சென்றுவிட்டது. இப்போது இதன் பெயர் வெடிப்பு.




எப்போதும் நாம் எந்த ஒரு துறையிலும் முற்றிலும் தன்னிறைவு பெற்ற நாடு கிடையாது. ஒவ்வொரு விடயத்திலும் தன்னிறைவு என்ற பெயரில் நாம் ஊரை அல்ல நாட்டை ஏமாற்றி கொண்டு இருக்கிறோம். (அது பற்றி ஒரு பெரிய பதிவு போட வேண்டிருக்கும்) அப்படி இருக்கும்போது நமது மக்கள்தொகைக்கு ஏற்ப நாமும் விவசாமும் பார்க்கவில்லை. வெளிநாடுகளில் இப்போது வாங்கும் விவசாய பொருட்களின் எண்ணிக்கைகளும் அதிகரித்து ஒரு அளவில் மாத்திரைகளை மட்டுமே சாப்பிடும் நிலை இங்கே வரலாம். அல்லது இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்ய கூடாது என்று அந்த நாடுகளும் முடிவு எடுக்கும் நிலை வரலாம்.நம்ம மக்கள்தொகை தான் வெடிப்பு என்று சொல்கிறோம். அவர்களுடையது மக்கள்தொகை பெருக்கமே. பெருக்கத்தை உள்நாட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே சமாளிக்க முடியும். அப்படி இருக்கும்போது அவர்களின் தேவை போகவே நமக்கு ஏற்றுமதி செய்ய இயலும். ஒரு நாட்டில் ஒரு முறை உணவு தட்டுபாடு வந்தது என்றால் முதலில் தடை செய்வது உணவு பொருட்கள் ஏற்றுமதியை தான். அப்படி ஒரு நாடு தனது தேவைக்காக அங்கே ஏற்றுமதி தடை கொண்டு வந்திருக்கும்போது எங்கே என்ன செய்ய முடியும்? வெங்காயத்திற்கு பதில் தொலைக்காட்சி பெட்டியையா சமைக்க முடியும்.



அவன் கொடுக்கிறான். நான் வாங்குகிறேன். இதில் உனக்கு என்ன கஷ்டம். யாருக்கு என்ன நஷ்டம். எந்த ஒரு இலவசமும் முதலில் இனிக்க தான் செய்யும் பின்னர் அதுவே பரவி நம்மை முடமாக்கும். எப்போது எல்லாம் தொலைகாட்சியை பார்க்கிறோம்? பொழுது போகவில்லை என்றா? சரி. இது விவசாயம் செய்பவர்களுக்கு பொருந்துமா? நிச்சயம் பொருந்தாது. அப்படி இருக்கும்போது தொலைகாட்சிகளின் எண்ணிக்கை மக்கள்தொகையினால் பெருகி தெருவிற்கு ஒன்று இருந்த போதே நாம் நாள்கணக்கில் அதனை கண்டு களித்தோம். இப்போது வீட்டுக்கு வீடு என்னும்போது எப்படி இருக்கும்?



இப்படி மக்கள்தொகை அதிகமாக்கும் பொருள் தருவதை விட(தொலைகாட்சியில் நடுஇரவில் வரும் பாடல்கள் எல்லாம் கேட்ட பின்னர் சும்மாவா படுக்க முடியும்) அரசே குடும்பக்கட்டுப்பாட்டை கட்டாயமாக்கலாம். இல்லை என்றால் இலவசம் என்று கேட்கும் எல்லாருக்கும் ஆணுறையை மட்டும் இலவசமாக கொடுக்கலாம். (இதனை பெறுவதற்கும் யோசிப்பார்கள்) நம்மை விட மக்கள்தொகை அதிகம் உள்ள சீனா இப்போது மக்கள்தொகை வெடிப்பை தடுக்க குடும்பகட்டுபாட்டு திட்டங்களை கட்டாயமாக்கி உள்ளது. நாம் இரண்டாம் இடத்தில் தானே என்று நினைக்கிறோம். ஆனால் நாம் தான் முதலிடத்தில் இன்னும் பத்து வருடத்தில் இருப்போம். சீனாவின் உணவு உற்பத்தி தன்னிறைவு அடைந்து பல வருடங்கள் ஆகின்றது. அதே நேரத்தில் அவர்கள் மக்கள்தொகையும் கட்டுக்குள் கொண்டு வந்து உள்ளார்கள். அடுத்த பத்து வருடங்களில் என்ன செய்வது என்று அங்கே ஒரு செயல்திட்டத்திற்கு வந்து விட்டார்கள். ஊழலும் குறைவு( ஊழல்களுக்கெல்லாம் சாதாரணமாகவே மரண தண்டனை கிடைப்பதாக கேள்வி).



அடுத்த பத்து வருடத்திற்குள் ஒரு ஒழுங்கற்ற ஒழுங்கினமான செயலற்ற நிலையில் இருக்கும் நாடாக இந்தியா இருக்க வாய்ப்பு இருக்கிறது.



  • இதுவரை ஊழல்கள் செய்தவர்கள் எவரும் தண்டிக்கப்படவில்லை.
  • ஊழல்கள் எல்லாத்துறையிலும் மலிந்து போய்விட்டன.  
  • மக்கள்தொகையை கட்டுக்குள் கொண்டுவர முயற்சிகள் இல்லை. 
  • உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடையவில்லை. 
  • மக்கள்தொகை வெடிப்பு ஒரு அளவில் யாரும் யாரையும் குறை சொல்ல முடியாத நிலைக்கு தள்ளும்.



உதாரணம்: ராணுவ வீரர்கள் லஞ்சம் பெற்று கொண்டு எல்லைகளை விட்டு கொடுத்தால் என்னவாகும் ?

 சரி. எல்லாரும் தானே இதில் பாதிக்கப்படபோவது. அப்புறம் என்ன நமக்கு கவலை என்கிறீர்களா?



அதிலும் ஒரு சிறு பிரச்சினை இருக்கிறது. ஊழல்கள் செய்பவர்கள் எல்லாரும் மேலை நாடுகளில் செண்டு உட்காந்து விடுவார்கள். இங்கே மட்டுமே சொத்து வைத்து இருக்கும் அனைவரும் ஒரு நாள் சோத்துக்கு அலைவது நிச்சயம். என்னடா ஊழல்களை பற்றிய பதிவு போல இருக்கிறது என்று நினைக்கிறீர்கள் தானே? மக்கள்தொகை மிகவும் குறைவாக இருந்தபோதும் ஊழல்கள் இருந்தன. ஆனால் சிறிய அளவில். மக்கள்தொகையும் ஊழல்களும் ஒன்றுக்கு ஒன்று தொடர்பானவை. மக்கள்தொகை கூடும்போது அந்த தொகுதியில் இருக்கும் மக்களுக்கு செய்வதற்கென்று வழங்கப்படும் தொகையும் அதிகமாகும். அதில் அடிக்கும் கமிசனும் அதிகமாகும். இது தான் நியதி.



எல்லா பாதுகாப்பு நிறுவனங்களின் கணக்கெடுப்புகளும் சீனா இந்தியாவின் மீது எப்போது வேண்டுமானாலும் படையெடுக்கலாம் என்று உள்ளன. ஆனால் சீனாவிருக்கு தெரியுமோ தெரியாதோ நம்மை நாமே அழிப்பதற்கு ஏற்கனவே நாம் ஒரு போர் தொடுத்து உள்ளோம் என்பது. இந்த கணிப்புகளும் நினைப்புகளும் போரியல் தந்திரங்களும் மாறக்கூடும். ஆனால் நம்மை நாமே அழிக்க மக்கள்தொகை விட பெரிய ஆயுதம் உலகில் இல்லை.



 

அடுத்த ராஜினாமா நாடகம் தயார்

தென் மண்டல அமைப்புச் செயலாளர் பதவியிலிருந்து விலக அழகிரி முடிவு செய்துள்ளதாகவும், மத்திய அமைச்சர் பொறுப்பில் இருந்து விலகுவதாகவும் செய்திகள் சொல்லுகின்றன. அடுத்த வாரம் நடக்க உள்ள கனிமொழி ஏற்பாடு செய்துவரும் சென்னை சங்கமம் நிகழ்ச்சியை ரத்து செய்ய வேண்டும் என்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவை தற்காலிகமாக தி.மு.க -விலிருந்து நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்ததாக தெரிகிறது. இது உண்மையில் நம்பும்படியாக இல்லை. ஏன் என்றால் மதுரையில் எந்தவொரு பத்திரபதிவும் அஞ்சாநெஞ்சனுக்கு தெரியாமல் நடக்காது. ஒவ்வொரு பத்திரபதிவு பதிவாளரும் அண்ணனிடம் ஒருவார்த்தை சொல்லியாச்சா என்று கேட்டுவிட்டே பத்திரங்கள் பதிவது வழக்கம். பத்திரபதிவில் வரும் கட்டிடம் அல்லது நிலத்தின் மதிப்பு ஒரு கோடிக்கு மேல் இருந்தால் கண்டிப்பாக அந்த பகுதி பத்திர பதிவாளர் சொல்லும் ஒரே வார்த்தை" அண்ணன்கிட்ட சொல்லியாச்சா என்று தான்". இது தவிர முக்கிய இடங்களில் உள்ள நிலங்கள் அல்லது கட்டிடங்கள் சம்பந்தமான பத்திரபதிவிற்க்கும் இது பொருந்தும். அப்படி இருக்கும் அண்ணன் ஏற்கனவே இந்த ஸ்பெக்ட்ரம் ஊழல் மூலம் கிடைத்த பணத்தில் ஒருபகுதியை பெற்று உள்ளதாக தெரிகிறது. அண்ணனிடம் ஒரு நல்ல விடயம் என்னவென்றால் பணம் வாங்குவதற்கு முன்னர் தான் அவர் எதிரியாக பார்ப்பார். பணம் வாங்கி விட்டார் என்றால் நீங்கள் அவரின் சொந்த தம்பி என்ற அளவுக்கு பார்த்து கொள்ளும் அளவிற்கு நன்றி பாராட்டுவார்.


அவரின் இயல்பு இப்படி இருக்க, அவர் சென்று ராஜினாமா பற்றி பேசியதாகவும் மிரட்டல் விடுத்ததாகவும் வந்த கதையானது அடுத்த நாடகமாகவே தெரிகிறது. நாங்க எல்லாம் நல்லவர்கள், அவர்கள் தான் ஊழல் செய்தார்கள் என்று சொல்வதற்கு இப்படி ஒரு நாடகம் நடத்தி உள்ளனர். எப்பவும் கருணாநிதி ஒரு பிரச்சினையோ இல்லை ஒரு சம்பவத்தையோ மறைக்க வேறு ஒரு சம்பவத்தை அல்லது பிரச்சினையை நடத்துவது வழக்கம். அதில் ஒன்று தான் இது.


இதற்கு முன்னர் நடந்த நாடகங்கள் சிலவற்றை கீழே குறிப்பிட்டு உள்ளேன்.

  1. ஈழத்தமிழர் படுகொலைகளை தடுக்க தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா
  2. ஈழத்தமிழர் படுகொலைகளை தடுக்க முன்னுதாரனமாக கனிமொழி ராஜினாமா
  3. ஈழத்தமிழர் படுகொலைகளை தடுக்க கருணாநிதியின் நான்கு மணிநேர உண்ணாவிரதம். 
  4. ஈழத்தமிழர் படுகொலைகளை தடுக்க கருணாநிதியின் மனித சங்கிலி போராட்டம். 
  5. ஈழத்தமிழர் படுகொலைகளை தடுக்க தந்திகள் அனுப்பும் போராட்டம் 
  6. ஈழத்தமிழர் படுகொலைகளை தடுக்க ஈழம் கூட வாங்கி தர தயார் என்று ஒரு முறை கூறி மறுநாளே மறுப்பு தெரிவித்தார். இதே போல் பிரபாகரன் நண்பர் என்று சொல்லி மறுநாள் பல்டி அடித்தார். பிரபாகரன் தீவிரவாதி அல்ல அவர் சார்ந்த இயக்கம் சரியில்லை என்று கூறி உள்ளார். 
  7. பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு, அவர் ( மட்டும்) அறிவித்த போர் நிறுத்தத்திற்கு பிறகு நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்படுவதாக செய்தி வந்த போது அவர் என்ன சொன்னார் ? மழை விட்டும் தூவானம் விடவில்லை என்றார். அதே பேட்டியின் இறுதியில் இப்போது என்ன செய்யலாம் என்றிருக்கிறீர்கள் ( இலங்கை தொடர்பில்) என வினவியபோது நக்கலாக நாம் போய் டீ குடிக்கலாம் என்றார். ஒரு இன மக்களின் பேரழிவிற்கு பிறகு சுமுக நிலை நிலவுவதாக சொன்னார். இதன் பொருள் தான் (அல்லது தாம் ) விரும்பிய சூழல் வந்துவிட்டது என்பதுதான். எம்பிக்களின் பயணத்திற்கு பிறகு ஜெயலலிதாவின் கேள்விக்கு பதிலளிக்கும் அறிக்கையொன்றில் நாங்கள் செலவு செய்து போய்வந்தோம். நீயும் முடிந்தால் போய் வா.. யார் தடுத்தது என்றார். 
  8. உயர்நீதிமன்றத்தில் நடந்த வழக்கறிஞர்கள் காவல்துறையினர் அடிதடியெல்லாம் இவரின் நாடகத்தில் சிறந்த காட்சிகள்.  
  9. பிரபாகரனின் தாயாருக்கு மருத்துவ சிகிச்சை என்று ஒரு நாடகம். அவரின் சார்பாக வந்த கடிதமே ஒரு நாடகம் தான்.
  10. கட்ச தீவு பிரச்சினையிலும் தமிழக மீனவர்கள் பிரச்சினையிலும் இன்னும் கண்டனங்களையும் கடிதங்களையும் மட்டுமே அனுப்பி நாடகம் நடத்துகிறார்.
  11. செம்மொழி மாநாட்டிற்காக புலிகள் தரப்பில் வந்த ஆதரவு கடிதமும் இவரின் நாடகங்களில் ஒன்று தான்.  
  12. உலகதமிழ் மாநாடு நடத்தும் அமைப்பு உலகத்தமிழ் மாநாடு இப்போது நடத்துவது சரியில்லை என்று சொன்னதும் அந்த அமைப்பின் ஒப்புதல் இல்லாமலே நடத்த முயன்று பின்னர் அதையே உலகத்தமிழர் செம்மொழி மாநாடு என்று நாடகம் நடத்தினார். 
  13. ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றி பேசுவதை தவிர்க்க மோகன்ராஜ் என்கௌன்டர். 
  14. முதுகுவலி என்கிறார்கள் இருந்தாலும் கலைநிகழ்ச்சிகள் என்றால் முதல் வரிசையில் இருக்கும் இவர் உடல்நிலை சம்பந்தமாகவும் நாடகம் தான் நடத்துகிறாரோ?

2010ஆம் வருடம் நான் எழுத மறந்தவை

ஒவ்வொரு வருடமும் பல விஷயங்களை கடந்து வந்திருப்போம். அதில் ஒரு சில விஷயங்கள் என்னை மிகவும் பாதித்து இருக்கின்றன. ஆனால் அந்த விஷயங்களை எழுதுவதற்கு முன்னரே பலர் அதனை பற்றி எழுதி இருந்தாலும் நான் எழுதவில்லை என்பது தானே உண்மை. சில விஷயங்களை எழுதி பின்னர் நான் பதிவாக போட்டும் நான் வெளிவிடவில்லை. அப்படி காலங்கடந்த பதிவுகளை பற்றிய ஒரு பதிவு தான் இது. (இப்பவே கொட்டாவி வருது. அப்புறம் அடுத்தவருட பதிவில் தான் இந்த பதிவை பற்றி போட வேண்டிருக்கும்).


முதல் பதிவு சின்னஞ்சிறு குழந்தைகளை கொன்ற பாதகன் பற்றிய பதிவு. இதனை பற்றி எழுதினாலும் அதில் பல விஷயங்கள் நெருடலாகவே இருக்கின்றன. உண்மையான குற்றவாளி அவன் தான் என்றால் சுட்டுகொன்ற காவல்துறைக்கு கோவில் கட்டலாம். ஆனால் மோகன்ராஜ் முதல்நாள் தான் இதில் மேலும் சிலர் சம்பந்தப்பட்டு இருந்தனர் என்று கூறினான்.
 
இரண்டாம் பதிவு நீதிமன்ற தூக்குதண்டனையில் இருந்து தப்பித்து ஆயுள் தண்டனை என்று அறிவித்து இன்னும் விடுவிக்கபடாமல் இருக்கும் நளினி பற்றியது. இதில் ஆயுள்தண்டனை என்பதற்கான வரையறையை வலியுறுத்தி அந்த பதிவை எழுதினேன். முடிக்க முடியவில்லை. பல விஷயங்கள் புதிராகவே இருந்தன.( பெருந்தலைகள் எல்லாம் உலாவிக்கொண்டு இருக்கையில் இவரை போன்றவர்கள் தான் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை கெடுக்க போகிறாரா?).


மூன்றாவது பதிவு சீமான் பற்றியது. பெரியார் திராவிடகழகத்தை போல் ஈழத்தமிழர்கள் விடயத்தில் நேர்மையாக போராடுபவர்களில் சீமானும் அடக்கம். அவரின் போக்கினை கண்டித்து ஒருவர் எழுதி இருந்தார். அவரின் கருத்திற்கு மறுப்பு கூறும் வகையில் அந்த பதிவு இன்னும் வெளியிடபடாமலே இருக்கின்றது.



நான்காம் பதிவு ஆழ்வார்குறிச்சி காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக இருந்த வெற்றிவேல் படுகொலை(ஜனவரி 7, 2010) பற்றியது. காலம் கடந்து எழுதினாலும் மனிதம் கேட்டுவிட்டது என்று  கூறுவதற்காக எழுதினேன். ஆனால் முடிக்கவில்லை.கண்முன்னர் உங்கள் வீட்டில் இருக்கும் ஒருவர் வெட்டுபட்டால் எப்படி துடிப்பீர்கள். அதில் ஒரு சதவிதமாவது அங்கே வேடிக்கை பார்த்தவர்கள் துடிக்கவில்லையே என்பது தான் எனது ஆதங்கம்.

ஐந்தாம் பதிவு பிரபாகரனின் தாயாரை இந்திய அரசு சென்னை விமான நிலையத்தில் வைத்துத் திருப்பி அனுப்பியது(ஏப்ரல் 17) பற்றியது. காலங்கடந்து பேசினாலும் அம்மாவை அத்தை என்று நாம் அழைப்பதில்லை. நம் அம்மா வயதை ஒத்த ஒருத்தருக்கு நடந்த அநீதி பற்றிய அந்த பதிவில் அவர் எழுதியதாக தமிழக அரசு கூறிய கடிதம் போலியானது என்று கூறியிருந்தேன்.


ஆறாம் பதிவு பெரியாரின் கொள்கைகளை காப்பாற்ற நினைக்காமல் தனக்கு மட்டுமே சொந்தம் கொண்டாடும் வீரமணியை பற்றியது. இவர் எப்போதுமே அந்த காலகட்டத்தில் இருக்கும் ஆளும்கட்சிகளின் அடிவருடியாக இருப்பார். பெரியாரின் கருத்துக்கள் மட்டும் அல்ல அவரின் புத்தகங்களும் தனக்கே சொந்தம் என கொண்டாடி பின்னர் நீதிமன்றத்தினால் குட்டு வாங்கினார். இன்னமும் இவரை நம்பும் தொண்டர்களை என்னவென்று சொல்வது.




இப்படி எழுதிய பல பதிவுகளை வெளியிடாததற்கு வரும் கண்டனங்களை நான் வரவேற்கிறேன்

நெடுஞ்சாலை உணவகங்களில் நடக்கும் பகல் கொள்ளை

நம்மில் பலர் இந்த விஷயத்தை கவனித்து இருக்கலாம், ஒரு சிலர் இதில் ரொம்ப அவஸ்தைகளை பட்டு இருந்திருக்கலாம். அந்த ஒரு விஷயம் நெடுஞ்சாலை உணவகங்கள். நெடுஞ்சாலைகளில் நெடும்தூரம் பயணிக்கும் பயணிகள் தங்களை பயணத்தின் களைப்பில் இருந்து மீட்டு கொள்ளவே மேலை நாடுகளில் நெடுஞ்சாலை உணவகங்கள் ஏற்படுத்தப்பட்டன. நமது முன்னோர்கள் கட்டிவைத்த சத்திரங்களும் அதனை போன்றதாகவே இருந்துள்ளன. ஆனால் நமது கலாசாரத்தில் சத்திரங்கள் முதலில் இலவசமாகவும் பின்பு குறைந்த கட்டணத்தில் பயணிகளுக்கு உணவளித்து இருந்துள்ளனர்.


அப்படி இருந்த தமிழகத்தில் நெடுஞ்சாலை உணவகங்கள் என்ற பெயரில் பயணிகளின் ரத்தத்தை உறிஞ்சும் ஒரு சில உணவகங்கள் உள்ளன. தொழுதூர், விழுப்புரம், கொட்டாம்பட்டி, திருமங்கலம், அருப்புகோட்டை போன்ற இடங்களின் அருகே நடக்கும் நெடுஞ்சாலை உணவகங்களில் அடிப்படை வசதிகள் எதுவும் கிடையாது. அப்படி ஒரு வேலை கழிப்பிடம் இருந்தாலும் அதில் மூக்கை பிடித்து கொண்டு தான் செல்ல வேண்டும். உள்ளே தைரியத்துடன் சென்று மீண்டவர்கள் பின்னர் அங்கே சென்றதற்கான தொற்று நோய்களில் அவதி உற்றுள்ளனர். வெளியிலே சென்று மலம், சிறுநீர் கழித்து வருவது பேருந்தில் வரும் பயணிகளுக்கு நலம். ஆனால் அதன் அருகிலே உள்ள உணவகத்தில் உணவருந்தும் பயணிகளின் நிலை?



சரி வெளிப்புறம் தான் இப்படி சுகாதாரகேடுகளின் மையமாக இருக்கிறது என்றால் உள்ளே அழுக்கில் மூழ்கி எடுத்து இருக்கும் ஒரு அறையினை போன்ற அறையில் தான் உணவு பரிமாறப்படுகிறது. அங்கு வழங்கப்படும் குடிநீர் எப்படி இருக்கும் என்று சொல்ல தேவையே இல்லை. அந்த அளவிற்கு சுகாதாரமான :-) நிலையில் தான் இந்த நெடுஞ்சாலை உணவகங்கள் இருக்கின்றன.



சரி சுற்றுப்புறமும் சூழ்நிலையும் தான் சரி இல்லை. உணவாவது நன்றாக இருக்கும் என்று பார்த்தால் அதுவும் இல்லை. நாங்கள் சுடுவது தான் தோசை, நாங்கள் செய்வது தான் பிரியாணி என்று ஒரு உணவகத்தில் கூறியுள்ளனர். இரவு நேரத்தில் இந்த இரண்டு மட்டுமே அந்த உணவகத்தில் இருக்கும். யார் கேட்டாலும் அது மட்டும் தான் தருவார்கள்.



முட்டை குருமா விலை: 25 ரூபாய்

தோசை ஒன்று விலை :20 ரூபாய்



இங்கு வெளியிடங்களிலோ இல்லை நமது அருகே இருக்கும் உணவகங்களில் இப்படி விலைக்கு நன்றாக இல்லாத உணவு இருந்தால் நாம் என்ன செய்வோம். நாம் அமைதி பேர்வழியாக இருந்தால் அடுத்த முறை இந்த உணவகத்திற்கு வருவதை தவிர்ப்போம்.(அடுத்தவர்களிடமும் இதையே சொல்லி வர வேண்டாம் என்று கூறுவோம்) கொஞ்சம் தைரியமான ஆளாக இருந்தால் அங்கேயே சண்டை போட்டு செல்வோம். ஆக எப்படி இருந்தாலும் அங்கே வரக்கூடியவர்கள் எண்ணிக்கை குறையும். ஆனால் இந்த உணவகங்களில் அப்படி எதுவும் நடக்காது. அடுத்த உணவகத்தில்(உங்களுக்கு பிடித்த நெடுஞ்சாலை உணவகத்தில் பேருந்து நிற்காது) சென்று சாப்பிட வாய்ப்பு கிடையாது. நடுக்காட்டில் உள்ள இவர்களின் உணவகங்களில் சண்டையெல்லாம் போட முடியாது.

அப்படி போட்டுவிட்டு உங்களால் பாதுகாப்பாக செல்வது கடினம்.

இந்த உணவங்கள் எல்லாம் ஆளும்கட்சியில் இருப்பவர்களால் மட்டுமே நடத்தபடுகின்றன.(திமுக, அதிமுக கட்சி பிரமுகர்களால் அந்த அந்த கட்சிகள் ஆட்சியில்)இங்கே நடக்கும் கொள்ளைகளை யாரும் கண்டுகொள்வதும் இல்லை கேட்பதற்கும் யாரும் இல்லை என்ற நிலையே உள்ளது.


இது சம்பந்தமாக யாராவது இதற்கு முன்னர் வழக்கு பதிவு செய்து வழக்கில் வெற்றி பெற்று இருக்கிறார்களா என்று தெரியவில்லை.

Popular Posts