போலி முகங்கள்-3

எல்லா சோசியல் நெட்வொர்கிங் தளங்களுமே மில்லியன் கணக்கில் பயனாளிகளை கொண்டு இருக்கின்றன. அதில் முக்கியமானவை பேஸ் புக்(Facebook), ஆர்குட்(Orkut) மற்றும் ஹாய்பைவ்(Hi5). இதில் இருக்கும் பயனாளிகளில் நூறு சதம் உண்மையானவர்கள் என்று சொல்ல முடியாது. அவர்களின் பயன்பாட்டு முறைகளும் பயன்பாடுகளும் தான் அவர்களை நிர்ணயம் செய்கின்றன. போலிகளை கீழ்க்கண்ட முறைகள் மூலம் கண்டறியலாம். ஆனால் அவர்கள் போலிகள் என்று முழுவதுமாக முத்திரை குத்த முடியாது.

 •  தன்னுடைய படத்தை தவிர மற்றவர்களின் படத்தை ஒருவர் போட்டு இருந்தால் அந்த கணக்கு உடையவரை கவனிக்க வேண்டும். உதாரணத்திற்கு ஒரு குழந்தையை படத்தை போட்டு இருந்தால் நாம் அவரை சந்தேக பட வேண்டியது இல்லை. அதற்கு பதில் அரைகுறை ஆடைகளுடன் இருக்கும் பெண்ணின் படமோ அல்லது ஆணின் படமோ இருந்தால் யோசிக்க வேண்டும். அதுவே ஆடைகளற்ற உடலின் படம் என்றால் கண்டிப்பாக அந்த கணக்கினை வைத்திருப்பவர் கண்டிப்பாக ஒரு போலி தான்.
 • பல ஆண்களின் கணக்கில் ஆண்கள் மட்டுமே இருந்தால் அதை வைத்து அவர்களை போலி என்று கூற இயலாது. அது அவரின் தலை எழுத்து.
 • அடுத்த முக்கியமான விடயம் அந்த கணக்கினை அவர்கள் தொடங்கியது எப்போது என்பது. நேற்று தொடங்கிய கணக்கில் இன்றைக்கு பத்து பேர் என்றால் ஏற்று கொள்ளலாம் ஐம்பது பேர் என்றால் யோசிக்க வேண்டும்.
 • ஒருவரின் கணக்கில் இருக்கும் படங்களை விட அவருடைய கணக்கின் பெயர் பல கார்டூன் படங்களுடன் சேர்க்கபட்டிருக்கும்.(tagged)
 • ஒரு சிலர்  தங்களின் கணக்கினை தொடங்குவது அந்த கணக்கில் இணைக்கப்பட்டு இருக்கும் இணையதள விளையாட்டுக்களில் விளையாடும்போது உங்களின் நட்பு வட்டத்தை விரிவாக்க சொல்லி அழைக்க வேண்டும்.( இல்லையென்றால் கோடி ரூபாய் உங்களின் கணக்கில் இருந்து சென்று விடும்!). அப்படி அழைப்பு விடுத்தும் நம்முடைய விளையாட்டுக்கு தோழர்கள் கிடைக்கவில்லை என்றால் தனியாக ஒரு சில போலி கணக்குகள் தொடங்கி அவர்களின் நட்பு வட்டத்தை விளையாட்டில் காட்டி மகிழ்கிறார்கள். ஒரு அளவுக்கு மேல் பல கணக்குகளில் இருந்து விளையாட முடியாது என்பதால் அவர்கள் உங்களை தொந்தரவு செய்ய கூடும்.
 • பெரும்பாலும் போலி கணக்கினை வைத்துள்ளவர்கள் தங்களின் கணக்கில் இருக்கும் படங்களை எல்லாரும் பார்க்கும் வகையில் வைத்திருப்பார்கள். அதாவது நீங்கள் அவருக்கு அன்னியமாக இருந்தாலும் கூட அவரின் கணக்கில் இருக்கும் தனிப்பட்ட படங்களை பார்க்கலாம். உண்மையில் எந்த ஒருவரும் தன்னுடைய அந்தரங்க படங்களை இப்படி பொதுவில் விட்டுவைக்க மாட்டார்கள்.
 • ஒருவரின் கணக்கில் இருக்கும் தகவல்கள் முழுமையாக இல்லாமல் sggdgdgdgdgdfg என்றோ அல்லது xxxx என்றோ அல்லது கிறுக்கியோ இருந்தால் நிச்சயம் அது போலி தான்.
 • முழுமையான கணக்கினை தொடங்க போலிகள் காத்திருப்பது இல்லை. அதற்காக எல்லா போலிகளும் அப்படி இருப்பதில்லை. ஒரு சிலர் நிறுத்தி நிதானமாக தங்களின் கணக்கினை மற்றவர் கவரும் வகையில் அல்லது சந்தேகபடாதவகையில் நிரப்பி இருப்பார்கள்.
 • போலிகள் தங்களுடைய கணக்கில் இடும் ஒரே வாசகம் இங்கே வந்து பாருங்கள் சொர்க்கம் தெரியும் என்பது போல் தான் இருக்கும். ஆக அவர்களின் முகப்பு பக்கத்தில் இடப்படும் வாசகங்களில் அது தெரிந்து விடும்.
 • ஒருவரின் கணக்கில் ஓராயிரம் பெண்கள் தினம் சேர்கிறார்கள் என்றால் நிச்சயம் அந்த கணக்கினை உடையவர் புகழ் பெற்ற ஒரு நபராக இருக்க வேண்டும். அல்லது அவர் போலி தான்.
 •  பெண்கள் பெரும்பாலும் தெரியாத ஆண்களை தனது நண்பர்களாக ஏற்று கொள்வது இல்லை. அப்படி இல்லாமல் ஒரு அழகான பெண்ணிடம் இருந்து உங்களுக்கு நண்பராக அழைப்பு(Friend Request) வந்தால் முதலில் உங்களை சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள். நீங்கள் யார் என்று. உங்களிடம் அவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பது தெரிந்து விடும். நீங்கள் ஓமகுச்சி போல் உங்களின் புகைப்படத்தை போட்டு இருக்கிறீர்கள். ஆனால் உங்களுக்கு ஐஸ்வர்யா ராயின் தங்கையிடம் இருந்து நண்பர் அழைப்பு(Friend Request)  வந்தால் யோசிக்க வேண்டும் அல்லவா.
 • இதே கதை தான் பெண்களுக்கும். பெரும்பாலும் ஆண்கள் பெண்களுக்கு தான் நண்பர் அழைப்பு விடுகின்றனர். அதை விடுத்து ஒரு அழகு பெண் உங்களுக்கு நண்பராக இருக்க அழைத்தால் யோசியுங்கள்.
 • மேற்கண்டவை எல்லாமே உங்களுக்கு அவர்களை யார் என்றே தெரியவில்லை என்றால் நீங்கள் செய்ய வேண்டியது.
மேலே சொன்ன விடயங்கள் கடினமாக இருந்தால் முதலில் உங்களுக்கு தெரிந்திராத அல்லது பேசிடாத நபர்களை கணக்கில் வகைபடுத்துங்கள். அடுத்து அதில் அவர்களுக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம் என்று பாருங்கள். ஒன்றும் இல்லையென்றால் அவர்களுக்கும் உங்களுக்கும் பொதுவான நண்பர்கள் யார் என்று பாருங்கள். அவர்களுக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம் என்று பாருங்கள். அதுவும் ஒன்றும் இல்லையென்றால். உங்களுக்கு இடையில் பொதுவான விடயம் என்ன இருக்கின்றது பாருங்கள். அப்படி ஒன்றுமே இல்லையென்றால் நிச்சயம் அவர்களை நீக்குங்கள். இல்லையென்றால் அவர்களால் நீங்கள் பாதிக்கப்பட போவது இல்லையென்றாலும் உங்களின் நண்பர்கள் பாதிக்கப்படலாம்.

போலி முகங்கள்-2

போலியான முகவரிகளுடன்(Fake Profiles) இவர்களின் வாழ்க்கை தொடங்கினாலும் இவர்கள் ஏதோ ஒரு விடயத்தில் தூண்டப்பட்டு இந்த விளையாட்டை ஆரம்பிக்கிறார்கள்.அது விளையாட்டு என்று நினைத்து விட்டுவிட்டால் மறு நாளில் இருந்து அவர் நல்ல மனிதராக நட மாடலாம். ஆனால் அவர் அந்த போலி கணக்கினை தினமும் நான்கு மணி நேரங்களுக்கு மேல் உபயோகித்தால் அது சத்தியமாக ஒருவகை மன நோயின் அறிகுறி தான்.
இந்த நோய் ஒருவித தாக்கத்தை அவருக்குள் உண்டு செய்கிறது. பெண் போல் உடை அணிந்து கொண்டு ஒருவர் தினமும் வந்தால் அவரின் மனநிலை எப்படி இருந்திருக்கும்.(யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் இப்படி எழுதவில்லை) தான் ஆண் இல்லையென்றே அவரின் உள்மனதில் பதியும் அல்லவா அதே போல் தான் இங்கேயும் பெண் பெயரில் ஒருவர் தன்னுடைய அந்தரங்க விடயங்களை விவரித்து கொண்டே இருந்தால் அங்கே அவர் அப்படி ஒரு பெண் இருப்பதாக எதிரில் இருக்கும் நபர்களை மட்டும் ஏமாற்றவில்லை. தன்னையும் தான்.இவர்கள் மனநோயினால் பாதிக்கபடுவது ஒரு பக்கம் இருந்தாலும் இவர்களை நம் நண்பராக இணைத்து கொண்டால் நாம் நமது கணக்கில் வைத்திருக்கும் குடும்பம் சம்பந்தமான படங்களை(Profile Pictures and albums) இவர்கள் முறைகேடாக பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. இது ஒரு முக்கியமான விடயம்/எச்சரிக்கையும் கூட. உங்கள் வீட்டு பெண்களின் படங்கள் வெளியிடங்களுக்கு பரவலாம். பலான தளங்களில் இவர்கள் வேறு ஒரு படத்துடன் இணைத்து உங்களை பழி தீர்த்து கொள்ளலாம். அல்லது அத்தகைய படங்களை உங்களுக்கே அனுப்பி உங்களை வெறுப்படைய செய்யலாம்.

இதில் பாதிக்கப்பட்டவர்களின் மனநிலையில் ஒரு குழப்பமும் இருக்காது. ஏன் என்றால் அந்த கணக்கில் இவர்கள் ஒன்றி விடுகிறார்கள். அவர்களுடன் பழகும் போலிகளும் இவர்களும் தங்களை தானே ஏமாற்றிக்கொண்டு இதை ஒரு விதமான முறையில் பரப்புகிறார்கள். சரி பரப்பிவிட்டார்கள். அடுத்து என்ன செய்வார்கள்? நாம் பணத்தையோ அல்லது பொருளையோ இழந்தால் சரி என்று விட்டு விடுகிறோம். நம்மை ஒருவர் போலியான கணக்கில் இருந்து கொண்டு பேசியதை போல் ஜோடனை செய்யப்பட்ட விவாதங்களை வைத்து நம்மை அசிங்கபடுத்துகிறார் என்றால்?

இவர்களுக்கு பொதுவாக இருக்கும் பழக்கங்கள்.


இவர்கள் ஒரு நாளைக்கு பல மணிநேரம் செலவிட்டாலும் இவர்கள் மென்பொருள் நிறுவனங்களில் அல்லது கணிபொறி சம்பந்தமான வேலைகள் அல்லது கணிபொறி மூலம் வேலை செய்பவர்கள் இல்லை.

இவர்கள் தொடர்ந்து கணிபொறி அருகில் இருப்பதால் முதுகு வலி இருக்க வாய்ப்புண்டு. இவர்களுக்கு இரவு தூக்கம் சரியாக இருக்காது. இவர்களுக்கு புதிதாக எந்த ஒரு வேலையும் செய்ய தோன்றாது.(இது முற்றிலும் உண்மை.) வேலைகள் வந்தால் தலைவலி என்பார்கள்.

மன நோயாளிகளை பாதுகாப்பது எதற்கென்றால் முதலில் அவர்களும் மனிதர்கள் என்பதற்கு தான். நம்மாலோ அல்லது அவர்களாலே கூட அவர்களுக்கு தீங்கு நேரலாம். இதற்கு அடுத்து எல்லாரும் கவனிக்க வேண்டிய காரணம் ஒன்று தான்.


அவர்களால் நமக்கு தீங்கு ஏற்படாத வண்ணம் நம்மை பாதுகாக்க தான் மன நோயாளிகளை பாதுகாக்கிறார்கள் அல்லது அடைத்து வைக்கிறார்கள்.உண்மை இப்படி இருக்கும்போது நாம் எதற்கு அவர்களை நமது வீடு போன்ற இணைய கணக்கில் உள்ளே நுழைய விடவேண்டும்? உண்மையில் யார் யாருக்கு அதிகபடியான நண்பர்கள் வேண்டும்? ஏன் வேண்டும்? சாதாரண ஒரு நபருக்கு ஐம்பதுகளில் நண்பர் எண்ணிக்கை இருந்தால் அது ஏற்று கொள்ளலாம். அதிகபடியான நண்பர்கள் இருக்க வேண்டும் என ஏன் நாம் எதிர்பார்கின்றோம்? அதனால் யாருக்கு பலன் இருக்கின்றது?நான் ஒரு அரசியல்வாதி என்றால் என்னுடைய கருத்தினை பரப்ப ஒரு ஊடகம் தேவை. அதற்கு தான் என்றால் சரி.நான் ஒரு விற்பனையாளர் என்றால் என்னுடைய பொருட்களை விற்க அல்லது விற்பனை தளத்திற்கு நண்பர்களை கொண்டு செல்ல என்றால் அதுவும் சரி.நான் ஒரு புகழ் பெற்ற நபர்.என்னுடன் பலர் பேச முனைந்து நண்பர் அழைப்பு விடுகிறார்கள் என்றால் அதுவும் சரி.ஆனால்ஒரு 15 அல்லது பதினாறு வயது பெண் அல்லது பையனின் கணக்கில் ஆயிர கணக்கில் நண்பர்கள் இருந்தால் அது எங்கே அவர்களை கொண்டு போய் விடும் என்பதை யோசியுங்கள்.
 
ஒவ்வொரு விடயத்தையும் யோசித்து யோசித்து செய்யும் பெற்றோர்களுக்கு இது பெரிய சவால் தான். உங்கள் மகன் அல்லது மகளின் கணக்கில் இருக்கும் நண்பர்களின் எண்ணிக்கையை கண்காணியுங்கள்.
மற்றவர்களுக்கு வருவோம்.

யார் யார் எப்படியெல்லாம் உபயோகபடுத்துகிறார்கள் என்று விவரித்தேன். அப்படி ஒரு முகம் தெரியாத நண்பரின் நட்பினால் நீங்கள் பெற போவது என்ன? அவரின் இணையதளத்தை மற்றவர்களுக்கு கொண்டு செல்லவோ அல்லது அவரின் கருத்துக்களை நீங்கள் கேட்கவோ விரும்பவில்லை என்றால் முதலில் அவரின் கணக்கினை உங்கள் நண்பர் வட்டத்தில் இருந்து துண்டியுங்கள். அதிலே பாதி பிரச்சினைகள் குறையும்.தெரியாத நண்பரின் கணக்கில் எழுதியிருக்கும் வாசகங்களை அழுத்தி அது வேறு ஒரு தப்பான தளத்தில் உங்களை விட்டுவிட்டால் என்ன செய்வது? அதுவும் குடும்பத்தில் அனைவரும் இருக்கும்போது நடந்தால்?

அடுத்த பதிவில் போலிகளை கண்டுபிடிப்பது எப்படி என்று பதிய உள்ளேன்.

போலி முகங்கள்-1

உங்களில் பலருக்கு இந்த பழக்கம் இருந்திருக்கலாம் அல்லது இந்த பழக்கம் உடையவர்கள் உங்களின் பக்கங்களில் நுழைந்து உங்களை ஏமாற்றி கொண்டு இருக்கலாம். இந்த பழக்கம் உள்ளவர்கள் அனைவரும் மனநோயினால் பாதிக்கப்பட்டவர்கள் என்றே மருத்துவ உலகங்கள் கூறுகின்றன. அப்படி என்ன பழக்கம் பற்றி நான் கூறுகின்றேன் என்றால் மற்றவர்களையோ அல்லது தங்களை தாங்களே ஏமாற்றி கொள்வதற்காக போலியாக ஒரு இணைய முகவரிகளுடன்(Fake Profile) உலாவரும் பழக்கம் தான். இவர்களை எல்லாம் கீழ்க்கண்ட இணைய தளங்களில் பார்க்கலாம்.
 • பொது குழுமங்கள்(Forums)
 • கல்யாண பதிவு இணையங்கள்(Matrimony Sites)
 • சோசியல் நெட்வொர்கிங் தளங்கள்( Social networking sites)
 • செய்தி தளங்கள்.(News sites)
பொது குழுமங்கள்(Forums):
நாம் எல்லாரும் ஒரு தளத்தில் ஒரு செய்தி பிடிக்கவில்லை அல்லது நமக்கு எதிராக இருந்தால் உடனே அதற்கு எதிர்ப்பு தெரிவிப்போம். இப்படி தெரிவிக்க முதலில் நமது பெயரில் இருக்கும் கணக்கின் மூலம் மறுப்பு அல்லது எதிர்ப்பை வெளியிடுகிறோம். அப்படி வெளியிட்டவுடன் உங்களின் மறுப்பு அல்லது எதிர்ப்புக்கு ஒரு மறுமொழி வர இப்படியே இது தொடர்கிறது. ஒரு நிலையில் நமது கணக்கின் மூலம் கொடுக்கும் பதிலுரைகளுக்கு வலுவூட்ட அதில் இன்னொருவரின் ஆதரவு தேவைபடுகிறது. அந்த இன்னொருவர் கிடைத்துவிட்டால் இந்த போலி முகங்களுக்கு வேலை இல்லை. ஆனால் எல்லாரும் கோவணம் கட்டி இருக்கும்போது நான் அப்படி இருக்க மாட்டேன் என்று அடம்பிடிக்கும் மனிதர்களுக்கு அவர்களே தொடங்கும் வேறு ஒரு கணக்கு தான் தோழன். அதாவது இல்லாத ஒரு நபரின் வாதத்தால் தனது வாதத்திற்கு வலு சேர்க்கும் திட்டம். இப்படி வலு சேர்க்கும் இவர்களின் திறமை போலி கணக்கு தொடங்குவதில் மட்டுமே இருக்கிறது. இவர்களுக்கு வாதத்திறமை கடைசி வரைக்கும் கிடைப்பதில்லை.அவர்களின் வாதமும் ஜெயிப்பது இல்லை.

கல்யாண பதிவு இணையங்கள்(Matrimony Sites):
வெளிநாடுகளில் இருக்கும் முறைகள் எல்லாம் இந்தியா வந்தால் எப்படி இருக்கும். அப்படி துணைகளை நாமே தேடுவதற்கு மேலைநாடுகளில் செயல்பட்டு வந்த முறைகளை போல இந்தியாவினுள் அறிமுகபடுத்தபட்ட தளங்கள் தான் இந்த இணைய தளங்கள். இதில் உறுப்பினர் ஆவது ஒன்றும் கடினமான வேலை இல்லை ஆனால் ஒரு நிலைக்கு மேல் உங்களால் அடுத்தவரின் தகவல்கள் எடுக்க முடியாது. அதற்கு கட்டணங்கள் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். (இதில் இருக்கும் மணமகன் அல்லது மனமகள்களின் தொலைபேசி மற்றும் வருமான விவரங்களை மற்ற நிறுவனங்களுக்கு விற்று லாபம் சம்பாதிக்கின்றனர்.)


இதில் போலிகள் எப்படி உருவாகின்றனர் என்றால் உங்களுக்கு அல்லது உங்களின் நண்பருக்கு உருவாக்கப்பட்ட அந்த கணக்கினை வைத்து நீங்கள் ரொம்ப நேர்மையாக எல்லாரையும் தொடர்பு கொள்கிறீர்கள் ஆனால் உங்களின் தகுதிகளை வைத்து உங்களை அவர்கள் நிராகரிக்கிறார்கள்.பத்தாம் வகுப்பு படித்த மணமகன் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்க்கும் பெண்ணிற்கு அழைப்பு விடுகிறார் என்று வைத்து கொள்வோம். அந்த பெண்ணை பெற்றவர்கள் என்ன யோசிப்பார்கள் அல்லது என்ன செய்வார்கள்?இங்கே அந்த பெண்ணின் வீட்டில் இருந்து வரும் பதிலில் அல்லது பல காலமாக பதில் வராத காரணத்தில் அந்த பையன்/ மணமகன் என்ன செய்வார்? ஒரு வேலை அவர் சூழலை புரிந்தவராக இருந்தால் விடயம் அதோடு முடிந்து விடும். ஆனால் அப்படி இல்லை என்றால் அந்த நபர் தொடங்கும் விடயம் ஒரு போலியான மணமகன். அந்த போலிக்கு இந்த பெண்ணை விட படிப்பு அதிகம், வருமானமும் அதிகம். இப்படி அவரின் கற்பனையில் விளைந்த அந்த மணமகனை வைத்து அந்த மணமகளின் கணக்கிற்கு அழைப்பு விடுத்து ஏமாற்றுகின்றனர். அதற்கு அந்த பெண்ணின் வீட்டில் இருந்து மறு மொழி வந்தால் என்ன நடக்கும் தெரியுமா? இவர் உடனே நீங்கள் எனக்கு கொஞ்சமும் பொருத்தம் இல்லாதவர் என்று மறுமொழி அனுப்புவார்.
 
சோசியல் நெட்வொர்கிங் தளங்கள்( Social networking sites):
இந்த நூற்றாண்டுகளில் என்னவெல்லாம் சம்பாதிதீர்களோ அதையெல்லாம் விட உங்களிடம் ஒரு சோசியல் நெட்வொர்கிங் இணையதளத்தில் உங்களுக்கு கணக்கு இல்லாததை பெரிய குறையாக கூறும் காலம் இது. எப்படி பொது குழுமங்களில் தன் வாதத்திற்கு வலு சேர்க்கும் விதமாக ஒரு சிலர் போலியான கணக்குகளை கொண்டுள்ளனரோ அதே போல் சிலர் போலியாக கணக்குகளை தொடங்குகின்றனர்.அவர்கள் ஏன் தொடங்குகிறார்கள் என்பதற்கு கீழ்க்கண்ட காரணங்களில் எதோ ஒன்று அவர்களிடம் இருக்கிறது.
 • தனது கட்சிக்கு அல்லது தனது கொள்கைகளை எதிர்க்கும் நபர்களுக்கு எதிராக.
 • மறைமுக அல்லது தனது செக்ஸ் தேவைகளுக்காக.
 • தலித் அல்லது பார்பனிய கொள்கைகளை பரப்பும் போலியான வட்டங்களை உருவாக்குதல்.
 • பணம் கறக்க பெண்ணாக போலியான தகவல்களுடன்.
 • மார்க்கெட்டிங் எனப்படும் முறைக்காக.
இப்படி பல காரணங்கள் இருந்தாலும் பெண் போல இருக்கும் ஆண்கள் செய்யும் மார்கெட்டிங் அல்லது பணம் பிடுங்கும் முயற்சிகள் தான் அதிகம் நடக்கின்றன.


அடுத்த அளவில் செக்ஸ் தேவைகளுக்காக என்று இது போகின்றது.
 
செய்தி தளங்கள்.(News sites):
செய்தி தளங்களை பொறுத்த அளவில் இது வேறு விதமாக இருக்கிறது. தங்களுக்கு மட்டுமே அதிக வாசகர்கள் அல்லது படிப்பவர்கள் வருகிறார்கள் என்று மற்றவர்களை நம்ப வைக்கவும் அல்லது அதன் மூலம் மேலும் வாசகர்களை கவரவும் இந்த போலியான முகவரிகள் அல்லது கணக்குகள் அவர்களுக்கு தேவைபடுகிறது. மேலும் ஒரு செய்திக்கு தான் வெளியிடும் கருத்து மற்றவர்களால் கவரப்படுவதை அனைவரும் விரும்புகிறார்கள். அப்படி வெளியிடும் கருத்து முகத்தை சுளிக்கும் விதமாக இருந்தால் என்ன செய்யலாம். அதற்கு மறுமொழி கொடுக்கலாம் அல்லது நாமும் ஒரு போலியான முகவரியை உருவாக்கி அதிலிருந்து அதை விட மகாமட்டமான பதில் கொடுக்கலாம். இப்படி அவர்களின் வெறுப்பையோ அல்லது கண்டனத்தையோ தெரிவிக்க சிலர் போலியான முகவரிகளை உடைய கணக்குகளை உருவாக்குகின்றனர்.
 
 
இந்த போலியான முகவரிகள் அல்லது கணக்குகள் யாரையுமே பாதிக்காமல் இருந்தால் இப்படியொரு தொடரினை நான் எழுதும் நிலைக்கு வந்திருக்க மாட்டேன். எனது பேஸ்புக் முகவரியில் இருக்கும் நண்பர்களில் பலர் போலிகள் என்றே எனக்கு தெரியும். என்னுடன் படித்த நண்பர் ஒருவருக்கு போலியான இணையத்தளம் மூலம் வேலைக்கு வருமாறு என்னுடன் படித்த நண்பர்களில் சிலர் அனுப்பி இருக்கின்றனர். அவரும் அந்த முகவரிக்கு சென்று எல்லாம் பார்த்து விட்டு ஏமாந்து விட்டார். பின்னர் அவரின் இமெயிலில் மீண்டும் ஒருமுறை சரி பார்த்த பொழுது தான் மேற்படி விவரம் எல்லாம் போலிகள் என்று தெரிந்தது.( இப்போது வேண்டுமானால் இது போல் போலி பரிசு சீட்டு அல்லது ஓசி பண மோசடிகள் அதிகம் ஆனால் அப்போது இந்த அளவுக்கு கிடையாது.)


என்னுடன் கூட படித்தவர் ஒருவரின் ஈமெயில் கணக்கினை யாரோ ஒருவர் திருடி அதை திரும்ப ஒப்படைக்க பணம் கேட்ட சம்பவம் நடந்தது.

இதெல்லாம் விட ஆறு வருடங்களுக்கு முன்னர் என்னுடைய யாஹூ ஈமெயில் கணக்கினை யாரோ திருடி எல்லாவற்றையும் அழித்து விட்டனர். இப்படி எல்லாம் செய்ய இவர்கள் ஏன் இவ்வளவு மெனக்கெடுகிறார்கள் என்பதும் இதில் அவர்களின் ஆதாயம் பற்றியும் தான் நான் யோசித்தேன்.

ஆனால் அதையும் மீறி சில விடயங்கள் இருக்கின்றன என்பது தெரிந்தது. அதை அடுத்த பதிவில் தொடர்கிறேன்.

Popular Posts