முறைகெட்ட அரசுகளும் முறையான சட்டங்களும்-2

சென்ற பதிவில் நிலம் சம்பந்தமாக குறிப்பிட்ட விடயங்கள் போக இருப்பது நிலத்தை வாங்குதல் அல்லது விற்றலில் இருக்கின்றது.

இப்போது ஒரு நிலத்தை வாங்க முடிவு செய்து உள்ளீர்கள் என்றால் அதனை பற்றிய விடயங்களை ஆராய பதிவாளர் அலுவலகம் செல்ல வேண்டி உள்ளது. அப்படி சென்றாலும் வில்லங்கம் சம்பந்தமாக விசாரிக்க நாம் தனியாக லஞ்சம் தர வேண்டி இருக்கிறது. இதையே நாம் முழுவதுமாக கணினி மயமாக மாற்றினால் என்ன? ஒரு இணையத்தளம் மூலம் நீங்கள் பணம் செலுத்திய பின்னர் அந்த குறிப்பிட்ட நிலத்தினை பற்றிய விவரங்களை காண்பித்தால் அரசுக்கும் வருமானம், நிலத்தை வாங்குபவருக்கும் இருந்த இடத்தில் இருந்தே வேலை நடக்கும். நிலத்தை வாங்குபவர் தவிர வேறு யாரும் இதனை பயன்படுத்துவதையும் தடுக்கலாம். இதன் மூலம் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம் புகுவதை தடுக்கலாம். இடைத்தரகர்களையும் தவிர்க்கலாம்.

நிலத்தை பார்த்தாச்சு. அடுத்து பதிவு செய்தல் தானே. நிலத்தை வாங்கும்போது பணத்தை கொடுக்க வேண்டும். அதற்கு பதில் ஒரு வங்கியில் உள்ள ஒரு கணக்கில் இருந்தே இதனை முடிக்கலாமே. எப்படி என்றால் உங்களுடைய சேமிப்பு கணக்கு உள்ள வங்கியில் இருந்து நீங்கள் விற்பவரின் கணக்கிற்கு பணம் செலுத்த வேண்டும். அப்படி செலுத்தும்போது அதனை வங்கி தனிப்பட்ட கட்டணம் வாங்கி கொண்டு அதற்கு சான்றிதல் வழங்கி அதனை அப்படியே இணையதளம் மூலமே பத்திர பதிவு செய்யலாம். இந்த பத்திர பதிவிற்கு

வங்கியானது சாட்சியாக இருக்கும் அல்லது வங்கியின் மேலாளர் சாட்சியாக இருப்பார். இதில் பதிவாளர் செய்ய வேண்டியது என்ன வென்றால் அவரும் இணைய தளத்தின் மூலம் அந்த பத்திர பதிவில் செலுத்த வேண்டிய கட்டணங்கள் செலுத்தப்பட்டு உள்ளனவா என்று பார்த்து இணையத்தளம் மூலம் அதனை சான்றளிக்க வேண்டும். எல்லாம் சரி என்றால் வாங்கியவரின் வீட்டு முகவரிக்கு அந்த பத்திரம் அடுத்த ஏழு நாட்களுக்குள் வரும்படி செய்யலாம்.

இதில் எந்த ஒரு இடத்திலும் லஞ்சம் வர வாய்ப்பும் இல்லை.

அடுத்தவருக்கு பத்து சதம் கொடுக்க வேண்டிய அவசியமும் இல்லை.


நிலம் வாங்குவதற்கும் விற்பதற்கும் வழிமுறை செய்து விட்டோம். அடுத்து?

அரசு நிலங்களையும் புறம்போக்கு நிலங்களையும் ஆக்கிரமிப்பு செய்து உள்ளார்கள். அவர்களை என்ன செய்வது? நம் நாட்டில் இருப்பதிலே ஒரு கடினமான கேள்வி இது தான்.

இவர்களை என்ன செய்வது? சட்டபூர்வமாக நடவடிக்கை எடுத்தால் மற்ற கட்சியினர் அதனை அரசியல் ஆக்குவார்கள். காலி செய்வது கடினம். இதற்கு முதலில் இவர்கள் ஏன் இங்கே வந்து குடியேறினார்கள் என்று பார்க்க வேண்டும்.

ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் வேலை தேடி அந்த அந்த மாநில தலைநகரத்தில் இப்படி பட்ட இடங்களில் முதலில் குடியேறுகிறார்கள். இவர்களின் வாழ்வாதாரங்கள் என்ன? கடல் அல்லது அதனை சார்ந்த இடங்களில் இவர்கள் குடியேறி இருந்தாலும் இவர்கள் மீனவர்கள் கிடையாது. இவர்கள் சென்னையை சுற்றி இருக்கும் குப்பங்களில் குடியேறி இருந்தாலும் அந்த குப்பங்கள் சென்னையின் வரலாற்றில் இருக்கின்றன. அப்படியிருக்கும் போது சட்ட விரோத நில ஆக்கிரமிப்பிற்கு மீண்டும் இதே மக்கள்தொகை பெருக்கம் தான் காரணம். இங்கே வந்து குடியேறும் மக்களின் எண்ணிக்கை அதிகமாகும் போது ஏற்கனவே குடிசையில் இருக்கும் மக்களும் தங்களின் சந்ததிகளை பன்மடங்கு பெருக்கி இருப்பார்கள். இவர்களோடு புதிதாக கூலி வேலை தேடி இங்கே வருபவர்களும் அந்த அந்த பகுதியில் இருக்கும் அரசியல்வாதிகள் மூலம் தற்காலிகமாக இருக்க சில இடங்களை பெறுகின்றனர். பின்னர் வருடங்கள் கழிந்தாலும் இவர்கள் வேறு இடங்களுக்கு செல்லாத காரணத்தால் அந்த பகுதிகளில் இருக்கும் இவர்கள் அந்த இடங்கள் இவர்களுக்கே சொந்தம் என்று சொந்தம் கொண்டாடுகின்றனர்.( ஒரு வீட்டில் பதினைந்து வருடங்களுக்கு மேல் வாடகைக்கு குடியிருந்தால் அந்த வீட்டை வாங்க குடியிருந்தவருக்கு முழு உரிமை இருக்கிறது). ஆனால் இது பொறம்போக்கு அல்லது சட்டவிரோத நில ஆக்கிரமிப்பு செய்பவர்களுக்கு பொருந்தாது. அதனால் இவர்களின் எங்கே இருந்து இங்கே வந்தார்களோ அங்கேயே இவர்களுக்கு வேலை வாய்ப்பு இருக்கும்பட்சத்தில் இவர்கள் இங்கே இருந்து கிளம்பி விடுவார்கள். ( புதிதாக எந்த ஒரு நிறுவனமாக இருந்தாலும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் தவிர மற்ற மாவட்டங்களில் தொடங்க வலியுறுத்த வேண்டும். இந்த மாவட்டங்களில் இதற்கு மேல் தொழில் தொடங்க அனுமதித்தால் அது மக்கள் தொகை வெடிப்பிற்கு வழி வகுக்கும்.)



ஆக்கிரமிப்பு ஓரளவு இதன் மூலம் கட்டுக்குள் வரும். அடுத்து ஒவ்வொரு பகுதியிலும் வடிகால் வசதியும், அதற்கேற்ப சாலை வசதியும் ஏற்படுத்த வேண்டும்.

நிலம் சம்பந்தமான மற்ற விடயங்கள் அடுத்த பதிவிலும் தொடரும்.

முறைகெட்ட அரசுகளும் முறையான சட்டங்களும்-1

ஏற்கனவே ஊழலை பற்றி நாமும் மற்ற சக பதிவர்களும் எழுதியதில் ஊழல்வாதிகள்
எல்லாரும் திருந்திவிட்டதால் மற்ற பிரச்சினைகளை பற்றி எழுதலாம்
என்று இதனை ஆரம்பித்து உள்ளேன்.
நம் நாட்டில் முறைபடுத்தபடாத பல விடயங்கள் இருக்கின்றன. அதனை பற்றி அலசுவதற்கே இந்த பதிவு. சிறு உதாரணத்திற்கு பெட்ரோல் விலையேற்றம் ஏறிக்கொண்டே சென்றாலும் அரசு இரு மடங்கு ஏற்றினாலும் அதை அப்படியே மற்றவர்களும் செய்கிறார்கள். பெட்ரோல் விலை ஏறும்போது ஒரு முறையும் அரசு பேருந்து கட்டணம் ஏறும்போது ஒரு முறையுமாக ஏற்றினால் என்ன அர்த்தம்? ஷேர் ஆட்டோவில் கிண்டியில் இருந்து ராமாபுரம் சந்திப்பிற்கு முன்னர் பத்து ரூபாய் என்றால் இப்போது இருபது ரூபாய். தட்டி கேட்க முடியாது. அரசு ஏற்றினால் மட்டும் கேட்கிறீர்களா என்ன என்பது தான் அவர்களின் கேள்வி. அது சரி! இதற்கு முன்னர் பேருந்தில் ஐந்து ரூபாய் இப்போது எட்டு ரூபாய் என்று இருக்கிறது என்றால் ஷேர் ஆட்டோவில் இருமடங்கு ஏற்றியதற்கு அரசே ஆதரிக்கிறதா இல்லை இதனை யார் அங்கீகரிகிறார்கள்? இது ஒரு உதாரணம் தான். உண்மையில் இது வெளியில் தெரிவது. தெரியாமல் இருப்பவன ஏராளம்.

எல்லா விடயத்திலும் ஜப்பானை போல் நாமும் இருந்தால் என்ன என்று கேட்பவர்கள் இருக்கிறார்கள்? ஜப்பானில் நூற்றில் தொண்ணூறு சதம் மலையும் அதனை சார்ந்த பகுதியுமாக இருக்கின்றது.இதில் சில மலைகளில் உறங்கும் எரிமலைகள் இருக்கின்றன. அதனால் மக்களுக்கு என்ன என்ன அடிப்படை தேவைகளோ அதனை அரசே முன்னின்று செய்கிறது. அதாவது ஒரு வீடு என்றால் அதற்கு தேவையான மின்சாரம், எரிவாயு மற்றும் தண்ணீர் போன்றவற்றை அரசே தருகிறது. ஒரு வீட்டின் பயன்பாட்டிற்கேற்ப அதற்கு கட்டணம் அரசிற்கு கட்ட வேண்டும். நம் அரசுகளோ இந்த மூன்றையும் தன்னுடைய முழு கட்டுபாட்டில் வைத்து கொள்ளாமல் தனியாரிடம் சிலவற்றை நேரடியாகவும் பலவற்றை மறைமுகமாகவும் கொடுத்து உள்ளன. அதனால் எதனையும் முழுவதுமாக அரசினால் கட்டுபடுத்த முடியாமல் இருக்கின்றன.அப்படி கட்டுபடுத்த முடியாமல் இருப்பது அடிப்படை தேவைகள் மட்டும் இல்லை. அதனையும் தாண்டி சிலவற்றை கட்டுபடுத்தாமல் விட்டு உள்ளோம். அந்த சிலவற்றை கீழே கொடுத்துள்ளேன்.


 
 
முதலில் தெரிவது நிலம்.


நம் நாட்டில் நூறு சதம் முறையாக வடிவமைக்கப்பட்டு உருவான நகரங்கள் எதுவும் இல்லை. இதிலென்ன இருக்கிறது என்று தானே கேட்கிறீர்கள். இப்போது சென்னையின் நகர எல்லை தாம்பரம், சோழிங்கநல்லூர், ராயபுரம், அம்பத்தூர் என்று எடுத்து கொள்வோம்.இந்த எல்லைகளுக்குள்ளே எந்த ஒரு பகுதிக்காவது முழுமையான சாலை வசதி இதுவரை செய்து கொடுக்கப்பட்டு உள்ளதா? அப்படி செய்து கொடுக்க அவர்களால் முடியாத பொழுது ஏன் மேலும் குடியிருப்புகள் அமைவதற்கு அனுமதி கொடுக்கிறார்கள். ஏற்கனவே அனுமதி கொடுத்து குடியிருப்புகளோ அல்லது வீடுகளோ கட்டி கொண்டு குப்பைகள் போல சாலைகளிலும், சரியே அமையாத அடிப்படை வசதிகளுடனும் வாழ்பவர்கள் இருக்கும் நிலையில் ஏன் அப்படி ஒரு நிலையினை மேலும் பெருக்க வேண்டும்?

இப்போது சென்னைக்குள் இருக்கும் விளைநிலங்கள் என்று பார்த்தால் ஒரு சதம் இருக்கிறது. அதை தவிர பசுமைபகுதி அல்லது காடு என்று பார்த்தால் எட்டு சதம் இருக்கிறது. இதனை தவிர மற்ற நிலங்களிலும் இப்போது இல்லையென்றாலும் இன்னும் இருபது வருடங்களில் எப்படியும் கட்டிடங்களோ அல்லது வீடுகளோ கட்டி விடுவார்கள். அதற்கு பின்னர் என்ன செய்வார்கள்? முதலில் இருக்கும் தனி வீடுகளை இடித்து விட்டு அதன் மேல் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டினால் ஒழிய எதிர்காலத்தில் ஏற்பட போகும் இட நெருக்கடியை சமாளிக்க முடியாது. அப்படி எல்லாருமே அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டிக்கொண்டு அங்கே குடியேறினால் கூட அதற்கு அடுத்த பத்தாண்டுகளுக்கு பிறகு மீண்டும் வரவிருக்கும் இட நெருக்கடியை சமாளிக்க முடியாது.




இப்போது சென்னையில் இருக்கும் மக்களின் எண்ணிக்கை இரண்டு கோடிக்குள் வருகிறது. இங்கே வேலை தேடிவருபவர்களால் மக்கள் தொகை அதிகமாகிறது என்றால் அதையே ஏன் அவர்கள் அங்கே செய்வதற்கு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்க கூடாது. மென்பொருள் துறையில் வேலை செய்ய இங்கே இருப்பவர்களின் எண்ணிக்கை மற்றும் மற்ற நிறுவனங்களில் வேலை செய்யும் மக்களின் எண்ணிக்கை என்று பார்த்தால் அது ஒரு அறுபது லட்சம் வருகிறது.


எந்த ஒரு மென்பொருள் நிறுவனமாவது சென்னையை தவிர மற்ற இடங்களில் நிறுவனங்களை நடத்த முடியாது என்று சொல்லுகிறார்களா என்ன? அப்படியில்லை. அவர்கள் எதிர்பார்க்கும் வசதிகள் எங்கு இருந்தாலும் அவர்கள் அங்கே தங்கள் நிறுவனங்களை நடத்த தயாராக இருக்கிறார்கள். அப்படி ஏற்படுத்தி கொடுத்தால் இங்கே இருக்கும் நிறுவனங்கள் வறட்சியில் இருக்கும் பல மாவட்டங்களுக்கு கொண்டு சென்று அந்த மாவட்டங்களில் நிறுவனங்களை நடத்தினால் சென்னையினை நோக்கி மக்கள் வருவது நிறுத்தப்படும். அந்த மாவட்டங்களில் அப்படி உருவாகும் நகரங்கள் முழுவதுமாக வடிவமைப்பு செய்த பின்னர் அதனை கட்டுபடுத்த முடியும்.

முறையான சட்டங்கள் இதற்கு மட்டும் அல்ல பல இடங்களில் தேவைபடுகிறது. நிலம் தொடர்பான மற்ற விடயங்களை அடுத்த பதிவிலும் தொடர்கிறேன்.

Popular Posts