ஈழத்தமிழர்களின் பெயரில் நடக்கும் மோசடிகள்

ஈழத்தமிழர்களை நமது மத்திய மாநில அரசுகளும்  அரசியல் கட்சிகளும் ஏமாற்றி விட்டன,ஏமாற்றியும் வருகின்றன. ஆனால் இந்த பதிவு அவர்களை ஏமாற்றி வரும் சக மனிதர்கள் மற்றும் நம் சக தமிழக தமிழர்களை பற்றியது. 
 
அவர்களுக்கு நமது தமிழக அரசு வழங்கும் உதவிதொகையானது மிக சொற்பமே. அந்த உதவித்தொகையை வைத்து மட்டுமே வைத்து ஒருவர் தனது தேவைகளை ஒரு வாரத்திற்கு கூட பூர்த்தி செய்ய இயலாது. அப்படி இருக்கும் நிலையில் அவர்கள் வெளியில் சென்று வேலை பார்த்து தான் தங்களின் குடும்பத்தை காப்பாற்றும் நிலையில் உள்ளனர். அப்படி வேலைக்கு செல்லும்போதும் அவர்கள் காலை ஆறு மணியில் இருந்து மாலை ஆறு வரைக்கும் தான் முகாமிற்கு செல்லும் நிலை உள்ளது. அருகே இருக்கும் இடங்களில் அவர்கள் வேலை செய்தாலும் அவர்களின் உழைப்பிற்கு ஏற்ற ஊதியங்கள் கொடுக்கப்படுவதில்லை. இது தான் பெரும்பாலும் எல்லா இடங்களிலும் நடக்கிறது. யாரும் இதனை தட்டிகேட்கவும் முடியாது. காரணம் அவர்கள் அகதிகள் என்பது தான். அவர்களின் உழைப்பை யார் வேண்டுமானாலும் அங்கே பொறுப்பில் இருப்பவர்களை சரிகட்டியோ இல்லை சரிகட்டாமலோ சுரண்ட முடியும் என்பதே உண்மை.

அடுத்தது தமிழகத்தில் இருக்கும் ஈழத்தமிழர்களின் குழந்தைகளின் படிப்பு செலவிற்கு என்று சகத்தமிழர்கள் கொடுக்கும் பணம் இடைத்தரகர்களிடம் போனது போகவே அவர்களிடம் போகிறது. உதாரணத்திற்கு அவர்களின் ஓராண்டிற்கு தேவையான தொகை நாற்பதாயிரம் என்றால் இடைத்தரகர்கள் உதவி செய்பவர்களிடம் கூறும் தொகை அறுபதாயிரம். ஆக இவர்களுக்கு இருபதாயிரம் ரூபாய் கிடைக்கிறது. உதவி செய்பவர்கள் இங்கே ஒன்றை கவனிக்க வேண்டும். ஈழத்தமிழர்களின் குழந்தைகளின் படிப்பு என்று சொல்லும்போது எல்லாருமே இரக்கப்பட்டு உதவி செய்கிறோம். அவர்களுக்கு அருகில் இருக்கும் பள்ளி கல்லூரிகளிலும் ஈழத்தமிழர்களின் குழந்தைகளின் படிப்பு செலவிற்கு நாமே பேசும்போது கட்டணங்களில் சலுகைகளும் தருகிறார்கள். ஆனால் இது எல்லாம் ஈழத்தமிழர்களுக்கும் தெரிவதில்லை,உதவி செய்பவர்களுக்கும் தெரிவதில்லை, இந்த இடைத்தரகர்களுக்கு மட்டுமே தெரிகிறது. இந்த விசயத்தில் நாம் எளிதாக ஏமாறுவதை தடுக்கலாம். எனது நண்பர்கள் சிலர், படிப்பு செலவிற்கு என்று ஈழத்தமிழர்களின் குழந்தைகள் சிலரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு உதவி என்று செய்யபோகும் போது இந்த இடைத்தரகர்கள் வந்தார்கள். அவர்களே நேரில் சென்று கட்டணங்களை கட்டிவிட்டு குழந்தைகளை கல்லூரிகளில் விட்டுவிட்டு வருவோம் என்றார்கள். நண்பர்கள் நேரில் சென்று அதே கல்லூரியில் கேட்டபின்னர் தான் தெரிந்தது இடைத்தரகர்கள் நண்பர்களிடம் கூறிய தொகையானது இடைதரகர்களின் கமிஷனையும் சேர்த்து தான் என்று. நண்பர்கள் நேரில் சென்று கட்டணத்தையும் கல்லூரி விடுதியில் சேருவதற்கு கட்டணத்தையும் கட்டிய பின்னரும் இடைத்தரகர்கள் நண்பர்களிடம் கேட்ட தொகை அளவு செலவாகவில்லை.




அரசியல்வாதிகளும் அலுவலர்களும் தான் ஈழத்தமிழர்களை ஏமாற்றுகிறார்கள் என்றால் சகத்தமிழர்களுமா இப்படி ஏமாற்றுவது? கட்டண ரசிதுகளை கேட்டால் மட்டுமே இவர்களை(இடைத்தரகர்கள்) பற்றி தெரிய வருகிறது.

ஈழத்தில் சண்டை நடக்கும்போது அங்கே இருந்து தப்பிவருபவர்கள் இங்கே இருக்கும் நிலை சரியில்லை என்பதால் வெளிநாடுகளுக்கு செல்ல முயற்சித்தனர். அவர்களுக்கு இங்கே உதவி செய்வதாக சொல்லி வசூல் செய்கின்றனர். அந்த பணத்தில் அவர்களை இவர்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்தார்களா என்றால் அதுவும் இல்லை. அவர்களின் பெயரில் வசூல் செய்த பணத்தில் போரூரில் வீடு கட்டிய நபர்களும் இருக்கிறார்கள். ஆனால் உண்மையில் உதவி செய்பவர்களை விட இவர்கள் சொல்லும் கதை தான் உண்மை என்பது போல் உள்ளது. அந்த அளவுக்கு உதவி கேட்பவர்களிடம் பழகி உள்ளார்கள். ஆனால் உதவி தொகையில் ஒரு பகுதி தான் சம்பந்தப்பட்டவர்களிடம் சேர்கிறது.


உதவி செய்பவர்கள் பலர் இருந்தாலும் இன்னும் ஈழத்தமிழர்களின் நிலை மாறாமல் இருக்க காரணம் இவர்களை போன்ற இடைத்தரகர்கள் தான். உதவி செய்பவர்களும் உதவி கேட்பவர்களும் நல்லவர்களாக இருந்து என்ன பிரயோஜனம். இடைத்தரகர்கள் நல்லவர்களாக இல்லையே.




உதவி செய்பவர்கள் அனைவரும் தயவு செய்து உங்களின் உதவிகள் சம்பந்தபட்டவர்களிடம் உதவிகள் போய் சேர்கின்றதா என்பதை ஒரு முறை உறுதிபடுத்தி கொண்டு பின்னர் அவர்கள் மூலமாகவே கூட உதவிகளை தொடரலாம்.

3 Response to "ஈழத்தமிழர்களின் பெயரில் நடக்கும் மோசடிகள்"

  1. மிக நல்ல எழுத்துநடை தொடர்ந்து எழுதுங்கள் நண்பா...
    Wish You Happy New Year
    நன்றி நண்பரே.உங்கள் நண்பர்களிடம் என்னை அறிமுகபடுத்தவும்.
    http://sakthistudycentre.blogspot.com
    என்னையும் கொஞ்சம் Follow பன்னுங்கப்பா...

    Unknown says:

    உங்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

    வருத்தமாகத் தான் இருக்கிறது படிக்க; கட்டணங்கள் கட்ட வேண்டிய முகவரி மற்றும் தகவல்கள் தெரிந்தாலும் இடைத்தரகர்களை விலக்குவது கடினம் என்று தான் தோன்றுகிறது.
    உபயோகமான பதிவு.

    புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Popular Posts